UPDATED : ஜூன் 13, 2024 12:00 AM
ADDED : ஜூன் 13, 2024 10:49 AM

மேட்டுப்பாளையம்:
இளநிலை கணித பட்டப் படிப்பில் சேர்வதற்கு, மாணவ மாணவியர் அதிகம் முன் வர வேண்டும். மேட்டுப்பாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் கணித பாடப்பிரிவில், 50 இடங்கள் காலியாக உள்ளன, என, கல்லூரி முதல்வர் கூறினார்.
மேட்டுப்பாளையம் மாதேஸ்வரன் மலை அருகே, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில், 2024 -25ம் கல்வி ஆண்டுக்கான, இளநிலைப் பட்ட வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நேற்று முன் தினம் துவங்கியது.
நேற்று இரண்டாவது நாள், காலை பி.காம்., பி.காம்., சி.ஏ., பி.ஏ., ஆங்கிலம், பொருளியல், சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை துறை ஆகிய ஐந்து பாடப்பிரிவுக்கான, மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடந்தது. ஐந்து பாடப்பிரிவுகளில், 300 இடங்கள் உள்ளன. ஆனால், 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
கல்லூரி முதல்வர் கானப்பிரியா கூறியதாவது:
கணிதத்தில், 60 இடங்களுக்கு, 10 பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர். வேதியியலில், 24 இடத்திற்கு, 23 பேரும், இயற்பியலில், 24 இடங்களுக்கு, 17 பேரும், கம்ப்யூட்டர் சயின்ஸ், 60 இடங்களுக்கு, 57 மாணவ, மாணவியரும் சேர்ந்துள்ளனர்.
கணித பாடப்பிரிவில்,10 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். இன்னும், 50 இடங்கள் காலியாக உள்ளன. கணித பாடத்தை படிப்பதன் வாயிலாக, அதிக வேலை வாய்ப்பு கிடைக்கும். எனவே, 12ம் தேதியிலிருந்து, 15ம் தேதி வரை நடைபெறும், கலந்தாய்வில் மாணவ, மாணவியர் பங்கேற்று, கணித பாடங்களை தேர்வு செய்ய முன்வர வேண்டும்.
இவ்வாறு கல்லூரி முதல்வர் கூறினார்.

