20 பக்கங்களிலேயே தமிழ் தேர்வு அடக்கம்: அறை கண்காணிப்பாளர்கள் அதிர்ச்சி
20 பக்கங்களிலேயே தமிழ் தேர்வு அடக்கம்: அறை கண்காணிப்பாளர்கள் அதிர்ச்சி
UPDATED : மார் 05, 2025 12:00 AM
ADDED : மார் 05, 2025 10:48 AM

பொள்ளாச்சி:
பொள்ளாச்சியில் நடந்து முடிந்த தமிழ்த்தேர்வில், 80 சதவீத மாணவர்கள், கூடுதல் விடைத்தாள்களை வாங்கவில்லை, என, அறை கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு, 38 மையங்களில், நேற்று முன்தினம் துவங்கியது. முதல்நாளில் நடந்த தமிழ்ப்பாட தேர்வை, 3,624 மாணவர்கள், 4,240 மாணவியர் என, 7,864 பேர் தேர்வு எழுதினர். பொதுத்தேர்வில் மாணவர்களுக்கு விடைத்தாள்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு, 30 பக்கம் புத்தக வடிவில் வழங்கப்படுகிறது.
அவையில்லாமல், தேவைக்கு ஏற்ப கூடுதல் விடைத்தாள் அளிக்கப்படுகிறது. ஆனால், நடந்து முடிந்த தமிழ்த்தேர்வில், 80 சதவீத மாணவர்கள், கூடுதல் விடைத்தாள்களை வாங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு மைய அறை கண்காணிப்பாளர்கள் கூறியதாவது:
மொழிப்பாடத்தை பொறுத்தமட்டில், பெரும்பாலான மாணவர்கள், பதில் தெரிந்த வினாக்களைக் கண்டறிந்து, விடை எழுத முற்படுகின்றனர். அதன்படி, தமிழ்த் தேர்வில், பெரும்பாலான மாணவர்கள், 20 பக்கங்களிலேயே விடை எழுதி முடித்துள்ளனர். அதனால், அவர்களுக்கு வழங்கப்பட்ட விடைத்தாளில், 10 பக்கங்கள் வீணடிக்கப்பட்டுள்ளது. நன்கு படித்த, 20 சதவீத மாணவ, மாணவியர் மட்டுமே கூடுதல் விடைத்தாள்களை வாங்கியுள்ளனர்.
மாணவர்கள், உரிய எழுத்துப் பயிற்சி மேற்கொண்டால் மட்டுமே தேர்வில் இடம்பெறும் வினாக்களுக்கு பதில் அளிக்க முடியும். இனி வரும் நாட்களில் நடக்க இருக்கும் தேர்வுக்கு மாணவர்கள் தீவிர பயிற்சி மேற்கொள்வது அவசியம்.
இவ்வாறு, கூறினர்.