UPDATED : டிச 18, 2025 10:58 PM
ADDED : டிச 18, 2025 11:00 PM
ஹூஸ்டன்:
அமெரிக்காவின் ஹூஸ்டனில் வரும் 2026 ஏப்.,ல் துவங்கும் 'பர்ஸ்ட் சாம்பியன் வேர்ல்டு பெஸ்டிவல்' எனப்படும், ரோபோடிக்ஸ் போட்டியில், ஸ்கேண்டிநேவியன் நாடுகளுக்காக பங்கேற்கப்போவது யார் தெரியுமா? நம்ம தமிழ்ப்பசங்க. என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?
டென்மார்க், நார்வே, ஸ்வீடன், பின்லாந்து நாடுகளை உள்ளடக்கிய பிரதேசம் ஸ்கேண்டிவியா என அழைக்கப்படுகிறது. இங்கு, சிறார் மற்றும் இளைஞர்களுக்காக நடத்தப்படும் உலகின் மிகப்பெரிய அறிவு மற்றும் தொழில்நுட்ப போட்டியான 'பர்ஸ்ட் லீகோ' கடந்த 2000ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது.
இந்த ஆண்டுக்கான ஸ்கேண்டிநேவிய பிராந்திய இறுதிப் போட்டியில், நார்வே, ஸ்வீடன், பின்லாந்து நாடுகளில் இருந்து 544 அணிகள் பங்கேற்றன. தொல்லியல் வல்லுநர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைக்குத் தீர்வை முன்வைக்க வேண்டும் என்பதே, இந்த ஆண்டுக்கான போட்டியின் கருப்பொருள். தொழில்நுட்பம், ரோபோடிக்ஸ் இணைந்து இதற்கான தீர்வு முன்வைக்கப்பட வேண்டும்.
கடந்த நவ., 29ம் தேதி நார்வேயில் நடந்த இறுதிப் போட்டியில், அஸ்கர் சர்வதேச பள்ளியின் 9ம் வகுப்பு மாணவர்களான ஹர்ஷித் ரித்வின், கவின் கனுங்கோ, ரிஷி அகில், ருதிக் பிரபு, வேத் விதி, விஷ்வா சஞ்சய் ஆகியோரடங்கிய 'தி லோர் மைனர்ஸ்' அணி சாம்பியன் பட்டம் வென்றது. முதலிடம் பிடித்த அணிக்கு, இந்திய மதிப்பில் சுமார் ரூ.4.5 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.
இதில், கவின் தவிர மற்ற அனைவரும் தமிழர்கள். வெளிநாடு வாழ் இந்திய பெற்றோரின் குழந்தைகள். கவினும் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர். அணியின் வழிகாட்டி செந்தில்குமாரும் தமிழர்.
இப்படி ஒட்டுமொத்த ஸ்கேண்டிநேவியாவையே கலக்கி சாம்பியன் பட்டம் பெற்று, தமிழகத்துக்குப் பெருமை தேடித் தந்துள்ளனர். இந்த அணியை, நார்வே நாட்டுக்கான இந்தியத் தூதர் குளோரியா கேங்டே அழைத்து பாராட்டியுள்ளார்.
இந்த தமிழ்ப்பசங்க அணி, 2026ல் அமெரிக்காவின் ஹூஸ்டனில் நடைபெறும் உலக அளவிலான போட்டியில், ஸ்கேண்டிநேவிய நாடுகள் சார்பில் பங்கேற்க உள்ளது.

