இருளர் இன மக்களின் கல்விக்கனவு நிறைவேற்றப்படுகிறது: கலெக்டர்
இருளர் இன மக்களின் கல்விக்கனவு நிறைவேற்றப்படுகிறது: கலெக்டர்
UPDATED : டிச 02, 2024 12:00 AM
ADDED : டிச 02, 2024 08:38 AM
விழுப்புரம் :
பழங்குடியின மக்கள் உட்பட 4,852 பேருக்கு ஜாதி சான்றிதழ் வழங்கி, இருளர் இன மக்களின் கல்விக்கனவு நிறைவேற்றப்பட்டுள்ளதாக, கலெக்டர் பழனி தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த நிறைந்தது மனம் நிகழ்வில் இருளர் பழங்குடியினர் மக்கள், பிள்ளைகள் கல்வி பயிலவும், தங்களின் வாழ்வாதாரம் மேம்படவும் ஜாதி சான்றிதழ் வழங்கிய முதல்வருக்கு இருளர் இன மக்கள் நன்றி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் அடுத்த டி.எடையார் கிராமத்தைச் சேர்ந்த 28 இருளர் பழங்குடியின மக்களுக்கு கல்வி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அப்போது, இருளர் மாணவர்கள் செல்வராணி, நித்திஷ் ஆகியோரின் பெற்றோர் தரப்பில் கூறுகையில், மற்றவர்களை போல, நாங்களும் கல்வி பயில வேண்டும் என்ற எண்ணம் எங்களிடம் இருந்து வந்தது.
அதற்கு ஜாதி சான்று ஒரு தடையாக இருந்து விடக்கூடாது என்பதற்காக, தமிழக முதல்வர் ஆட்சி பொறுப்பேற்றவுடன், இருளர் இன மக்களும் கல்வி பயின்று சமூகத்தில் சம அந்தஸ்து பெற வேண்டும் என்ற நோக்கில் எங்களின் பிள்ளைகளுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கி வருகிறார்.
இதன் மூலம், எங்கள் பிள்ளைகள் விரும்பும் பள்ளிகளில் பள்ளி படிப்பு மற்றும் கல்லுாரி படிப்பை தொடர மிகவும் உறுதுணையாக இருக்கும் என்றனர்.
மாவட்டத்தில், திண்டிவனம் வருவாய் கோட்டத்தில், 2,379 பழங்குடியின மக்களுக்கும், விழுப்புரம் வருவாய் கோட்டத்தில் 2,473 பழங்குடியின மக்கள் உட்பட மொத்தம் 4,852 பழங்குடியின மக்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கி, இருளர் பழங்குடியின மக்களின் கல்விக்கனவு நிறைவேற்றப்பட்டுள்ளதாக, கலெக்டர் பழனி தெரிவித்தார்.