சர்வதேச பயணியருக்கு பயிற்சி பட்டறை மாமல்லையில் துவக்கம்
சர்வதேச பயணியருக்கு பயிற்சி பட்டறை மாமல்லையில் துவக்கம்
UPDATED : பிப் 02, 2026 08:05 PM
ADDED : பிப் 02, 2026 08:07 PM

மாமல்லபுரம்:
ஜனவரி முதல் மார்ச் வரை, மாமல்லபுரம் சுற்றுலா வரும், சர்வதேச சிற்பக்கலைஞர்களுக்கான பயிற்சி பட்டறை நேற்று முன்தினம் துவங்கியது.
இந்தியாவில், சிற்பத் தொழிலாளர்கள், நீண்டகாலமாக உளியை பயன்படுத்தி, கடின பாறைகளில் சிலைகள் வடித்தனர். தற்போது கல் அறுப்பது உள்ளிட்ட பெரும்பாலான பணிகளை, இயந்திரம் மூலமே செய்து, சிலை வடிக்கின்றனர்.
பெரும்பாலான வெளிநாடுகளில், மார்பிள் எனப்படும், பளிங்கு கல்லில்தான் சிலை வடிக்கின்றனர். அவர்கள், இந்தியாவிற்கு சுற்றுலா வரும்போது, தமிழகத்தில் கடின பாறையில் சிலை வடிப்பதை காணவும், பயிற்சி பெறவும் ஆர்வம் காட்டுகின்றனர்.
ஸ்வீடன் நாட்டில், ஸ்டெபனோ பிகாரி தலைமையில் இயங்கும், 'குளோபல் ஸ்டோன் ஒர்க் ஷாப்' எனப்படும், உலகளாவிய கற்சிற்ப பயிற்சி பட்டறை அமைப்பும், மாமல்லபுரம் 'கிரியேட்டிவ் ஸ்கல்ப்ட்சர்ஸ்' சிற்பக்கூடம் இணைந்து, அவர்களுக்கு வாய்ப்பளிக்கிறது.
ஜனவரி முதல் மார்ச் வரை, மாமல்லபுரம் சுற்றுலா வரும், சர்வதேச சிற்பக்கலைஞர்கள், இங்கு நடக்கும் பட்டறையில் பங்கேற்பர்.
இப்பட்டறை, நேற்று முன்தினம் சிற்பக்கூடத்தில் துவங்கியது. தேசிய விருது பெற்ற சிற்பக்கலைஞர் பாஸ்கரன் தலைமையில், மேற்கு வங்கத்தை சேர்ந்த, ஓய்வு பெற்ற கூடுதல் தலைமைச் செயலர் பாலசந்திரன் துவக்கினார்.
பிற நாட்டு கலைஞர்களுக்கு, கடின பாறையை தேவையான அளவிற்கு தேர்வு செய்வது, அதில் உருவம் வரைந்து, இயந்திர சாதனம் மூலம் வெட்டி, சிலையாக உருவாக்குவது ஆகிய நுட்பங்கள் குறித்து, சிற்பக் கூடத்தினர் விளக்குவர்.
வெளிநாட்டு கலைஞர்களும், விருப்பம் போல், கடின பாறையில் சிலை வடிப்பர். அவர்களும், அவரவர் நாட்டு சிற்பத்தொழிலிலும், அதற்கான தொழில்நுட்ப சாதனங்கள் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து, சிற்பத் தொழிலாளர்களிடம் பகிர்வர்.
இங்கு, தாங்கள் வடித்த சிற்பங்களை, தங்கள் நாட்டில் சந்தைப்படுத்தி, இந்திய சிற்பக்கலை பாரம்பரியத்தையும் உணர்த்துவர்.

