UPDATED : பிப் 26, 2026 03:11 PM
ADDED : பிப் 26, 2026 03:13 PM
திருப்பூர்:
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்து ஆண்டுகளாகியும் வேலை கிடைக்காத படித்த இளைஞர்களுக்கு, தமிழக அரசு, மாதந்தோறும் உதவித்தொகை வழங்கி வருகிறது.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் 200 ரூபாய்; பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றோருக்கு 300 ரூபாய்; மாற்றுத்திறனாளிகளுக்கு 600 ரூபாய்; பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு 400 ரூபாய்; மாற்றுத்திறனாளிகளுக்கு 750 ரூபாய்; பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரிகளுக்கு 600 ரூபாய்; மாற்றுத்திறனாளிகளுக்கு 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு உட்பட்டவராகவும்; மற்ற பிரிவினர், 40 வயதுக்குள் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு இல்லை; 45 வயதுக்கு மேற்பட்டோர் சுய சான்று வழங்க வேண்டும்.
உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம், 72 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்; மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு இல்லை. கல்வி நிறுவனத்துக்கு தினமும் சென்று படிக்கும் மாணவ, மாணவியராக இருக்க கூடாது. ஆனால், தொலைதுார கல்வி மற்றும் தபால் வழி கல்வி கற்போர் விண்ணப்பிக்கலாம். தனியாரிடமிருந்தோ அல்லது அரசிடமிருந்து வேறு எந்த வகையிலும் எவ்வித உதவித்தொகை பெறுபவராக இருக்கக் கூடாது.
உதவித்தொகை பெறும் காலங்களில், வேலைவாய்ப்பு அலுவலக பதிவை தொடர்ந்து புதுப்பித்து வருபவராக இருக்க வேண்டியது அவசியம். வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பித்து, பொது மனுதாரர் 5 ஆண்டுகள்; மாற்றுத்திறனாளிகள், ஓராண்டு முடிவடைந்தும் வேலை கிடைக்காதோர் விண்ணப்பிக்கலாம். https://employmentexchange.tn.gov.in என்கிற இணையதளம் மூலமாகவோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம்.

