மேற்குவங்க ஆசிரியர் பணி நியமன விவகாரம்: சிபிஐ விசாரணை தொடர உச்சநீதிமன்றம் அனுமதி
மேற்குவங்க ஆசிரியர் பணி நியமன விவகாரம்: சிபிஐ விசாரணை தொடர உச்சநீதிமன்றம் அனுமதி
UPDATED : மே 07, 2024 12:00 AM
ADDED : மே 07, 2024 06:07 PM

புதுடில்லி:
25 ஆயிரம் ஆசிரியர் நியமனங்களை ரத்து செய்த கோல்கட்டா உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உச்சநீதிமன்றம் இன்று (மே 7) ரத்து செய்தது. மேலும், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணையை தொடரலாம் எனவும், அதுவரை ஆசிரியர்கள் மீது எந்த நடவடிக்கை எடுக்க கூடாது என்றும் உத்தரவிடப்பட்டது.
மேற்கு வங்கத்தில் 2016ம் ஆண்டுக்கு பிறகு சட்டவிரோதமாக நியமிக்கப்பட்ட 25 ஆயிரம் பள்ளி ஆசிரியர்களின் பணி நியமனத்தை கோல்கட்டா உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதற்கு எதிராக மேற்கு வங்க அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அதிகாரம் இல்லை
அப்போது மே.வங்க அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நீரஜ் கிருஷ்ணன் கவுல் கூறுகையில், 25 ஆயிரம் ஆசிரியர் பணி நியமனங்கள் சட்ட விரோதமாக நடந்தது என சி.பி.ஐ., கூட வழக்குப்பதிவு செய்யவில்லை. இத்தகைய உத்தரவு தொடர்ந்து இருக்க முடியுமா என கேள்வி எழுப்பினார்.
மே.வங்க பள்ளி சேவை வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா வாதிடுகையில், பணி நியமனங்களை ரத்து செய்ய உயர்நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை. இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் உத்தரவு உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என்றார்.
அப்போது தலைமை நீதிபதி சந்திரசூட், ஓஎம்ஆர் விடைத்தாள்களின் ஓஎம்ஆர் ஷீட்கள் மற்றும் அதன் நகல்கள் அழிக்கப்பட்டதா என கேள்வி எழுப்பினார். அதற்கு உறுதி செய்வது போல் ஜெய்தீப் குப்தா பதிலளித்தார். தொடர்ந்து சந்திரசூட் கூறுகையில், டிஜிட்டல் விடைத்தாள்களை பாதுகாப்பாக வைக்க வேண்டியது தேர்வு வாரியத்தின் கடமை என்றார். இதற்கு ஜெய்தீப் குப்தா கூறுகையில், நியமனங்கள் தொடர்பான பணிகளை அவுட்சோர்சிங் முறையில் அளிக்கப்பட்டது என்றார்.
பொய் சொன்னதா?
இதற்கு தலைமை நீதிபதி, யாரிடம் அளிக்கப்பட்டது? சிபிஐ இதனை கண்டுபிடிக்க முடியவில்லை. பாதுகாப்பு விதிமீறல்கள் நடந்துள்ளது. ஸ்கேனிங் செய்யவே ஆட்கள் வெளியில் இருந்து வரவழைக்கப்பட்டனர். ஆனால், அவர்கள் மொத்த தகவலையும் எடுக்க நீங்கள் அனுமதித்துள்ளீர்கள். மக்களின் தகவல்களை பாதுகாக்க வேண்டியது உங்களின் பொறுப்பு. அந்த தகவல்கள் தங்களிடம் மட்டும் தான் உள்ளது என தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தேர்வு வாரியம் பொய் சொன்னதா? என கேட்டார். அதற்கு ஜெய்தீப் குப்தா, இருக்கலாம் என பதிலளித்தார்.
உத்தரவு ரத்து
இதனையடுத்து தலைமை நீதிபதி கூறுகையில், இது ஒரு மோசடி. அரசுப் பணிகள் இன்று அரிதானவை. அதனை சமூக பொறுப்புடன் பார்க்கப்படுகின்றன. இந்த நியமனங்களில் மோசடி நடந்தால், மக்கள் நம்பிக்கை இழப்பர். அதனை எப்படி எதிர்கொள்வீர்கள்? என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து வாதங்களை கேட்ட தலைமை நீதிபதி சந்திரசூட், 25 ஆயிரம் ஆசிரியர் நியமனங்களை ரத்து செய்த கோல்கட்டா உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தார். இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணையை தொடரலாம் என அனுமதியளித்த சந்திரசூட், அதுவரை ஆசிரியர்கள் மீது எந்த நடவடிக்கை எடுக்க கூடாது எனவும் உத்தரவிட்டார்.