UPDATED : ஜூன் 18, 2026 06:41 PM
ADDED : ஜூன் 18, 2026 06:42 PM
நாமக்கல்:
நாமக்கல் கலெக்டர் மதுபாலன் வெளியிட்ட அறிக்கை:
தமிழக ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் சார்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, தாட்கோ மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஜவுளி வடிவமைப்பு, உற்பத்தி, துணிகளுக்கு சாயம், ஓவியம், அச்சிடுதல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.
இப்பயிற்சியை பெற, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராகவும், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவராகவும், வயது வரம்பு, 18 முதல், 35க்குள்ளும், ஆண்டு வருமானம், 3 லட்சம் ரூபாய்க்குள்ளும் இருக்க வேண்டும். பயிற்சி காலம், நான்கு மாதம். கோவை மாவட்டத்தில் பயிற்சி நடக்க உள்ளதால், தகுதிபெறும் நபர்கள் பயிற்சி நடக்கும் மாவட்டத்தின் விடுதியில் தங்கி படிப்பதற்கான செலவு தொகை தாட்கோவால் ஏற்கப்படும்.
பயிற்சியை முழுமையாக முடித்த இளைஞர்களுக்கு, சான்றிதழ் மற்றும் பயிற்சி அளிக்கும் நிறுவனம் மூலம் தகுதியான நபர்களுக்கு வேலைவாய்ப்பும், ஆரம்ப கால மாத ஊதியமாக, 25,000 முதல், 50,000 ரூபாய் வரையும், வருவாய் ஈட்டும் வேலை வாய்ப்பும் ஏற்படுத்தி தரப்படும். இப்பயிற்சியில் சேர தாட்கோ இணையதளமான www.tahdco.com என்ற முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம்.
