விமான போக்குவரத்து இடையூறுகளுக்கு மன்னிப்பு கோரியது இண்டிகோ; இயல்புநிலை திரும்ப பாடுபடுவதாக உறுதி
விமான போக்குவரத்து இடையூறுகளுக்கு மன்னிப்பு கோரியது இண்டிகோ; இயல்புநிலை திரும்ப பாடுபடுவதாக உறுதி
ADDED : டிச 05, 2025 07:59 AM

புதுடில்லி: விமான சேவை பாதிப்பால், இடையூறுகளுக்கு ஆளான வாடிக்கையாளர்களுக்கு இண்டிகோ விமான நிறுவனம் மன்னிப்பு கோரியது.
ஊழியர்கள் பற்றாக்குறையை காரணம் கூறி, 'இண்டிகோ' நிறுவனம் தொடர்ந்து நுாற்றுக்கணக்கான விமானங்களை கடந்த மூன்று நாட்களாக ரத்து செய்து வருவதால், ஆயிரக்கணக்கான பயணியர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து விமான போக்குவரத்து இயக்குநரகம், 'இண்டிகோ' அதிகாரிகளை அழைத்து நேற்று விளக்கம் கேட்டது.
நேற்று மட்டும் நாடு முழுவதும், 550- 'இண்டிகோ' விமானங்கள் ரத்து செய்யப் பட்டன. இதனால், பயணியர் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர். மேலும், தாமதம் காரணமாக பயண அட்டவணைகள் முற்றிலும் குழப்பமாக மாறியது.
இந்நிலையில், இண்டிகோ விமான நிர்வாகம் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த இரண்டு நாட்களாக இண்டிகோவின் நெட்வொர்க் மற்றும் செயல்பாடுகளில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட எங்கள் அனைத்து வாடிக்கையாளர்கள் மற்றும் தொழில்துறை பங்குதாரர்களுக்கும் நாங்கள் மனமார்ந்த மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். இந்த தாமதங்களின் தொடர்ச்சியான தாக்கத்தைக் குறைத்து இயல்புநிலையை மீட்டெடுக்க இண்டிகோ விமான நிறுவனம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது
எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் திட்டமிடப்பட்ட விமானங்களில் ஏதேனும் மாற்றங்கள் குறித்து நாங்கள் தொடர்ந்து தெரிவித்து வருகிறோம். மேலும், விமான நிலையத்திற்கு வருவதற்கு, முன்பு, https://www.goindigo.in/ என்ற இணையதளத்தில் தற்போதையை நிலைமையை சரிபார்க்க அறிவுறுத்துகிறோம்.
வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு இண்டிகோ விமான நிறுவனம் வருத்தம் தெரிவிக்கிறது. விரைவில் இயல்புநிலையை கொண்டு வர கவனம் செலுத்துகிறது. இவ்வாறு இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

