பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை: அத்துவான காட்டில் அனாதையாக பரிதவிப்பு
பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை: அத்துவான காட்டில் அனாதையாக பரிதவிப்பு
ADDED : அக் 02, 2025 11:55 PM

சிந்த்வரா, அக். 3-
அரசு வேலை பறிபோய்விடும் என்ற பயத்தில், பிறந்து மூன்று நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை அத்துவான காட்டில் பரிதவிக்க விட்டுச் சென்ற ஆசிரியர் தம்பதியை மத்திய பிரதேச போலீசார் கைது செய்துள்ளனர்.
அழுகுரல் ம.பி.,யின் சிந்த்வாரா மாவட்டத்தில் உள்ளது நந்தன்வாடி கிராமம். ஊருக்கு வெளியே நெடுஞ்சாலையோரம் உள்ள வனப் பகுதியில் இருந்து செப்., 28ம் தேதி இரவு பச்சிளம் குழந்தை அழும் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது.
பாறைகளுக்கு இடையே மறைத்து வைக்கப்பட்டிருந்த பச்சிளம் குழந்தைக்கு, அந்த நடுநிசியில் அதன் உடல் மேல் ஊர்ந்து கொண்டிருந்த எறும்புகள் தவிர, வேறு யாரும் துணையாக இல்லை.
பசியிலும், எறும்பு கடியிலும் குழந்தையின் அ ழுகுரல், வனப்பகுதியின் அமைதியை கிழித்துக் கொண்டிருந்தது. அதிகாலை நேரத்தில் அவ்வழியாக சென்ற ஊர் மக்களின் காதுகளுக்கு குழந்தையின் அழுகுரல் எட்டியது.
அழுகுரல் வந்த திசையில் தேடியபோது, பாறைகளின் இடுக்கில் குழந்தை கிடப் பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் வந்து குழந்தையை மீட்டு மாவட்ட மருத்துவமனையில் சேர்த்தனர். இரவு முழுதும் எறும்புகள் கடித்தும், கொடூர குளிரையும் தாங்கிக் கொண்டு பச்சிளம் குழந்தை உயிருடன் இருந்தது அதிசயம் என்றே டாக்டர்கள் தெரிவித்தனர்.
மறுபுறம் விசாரணையை துவங்கிய போலீசார், பச்சிளம் குழந்தையை காட்டில் தனியே பரிதவிக்கவிட்ட பெற்றோரை தேடிப்பிடித்து கைது செய்துள்ளனர்.
அதிர்ச்சி இதில் அதிர்ச்சி என்னவெனில், பெற்றோர் இருவருமே அரசு துவக்கப் பள்ளி ஆசிரியர்கள். கணவர் பெயர் பப்லு, மனைவி பெயர் ராஜ குமாரி. மத்திய பிரதேச அரசு சட்டத்தின்படி இரு குழந்தைகளுக்கு மேல் இருப்பவர்களுக்கு அரசு வேலை பறிபோகும்.
இதனால், எங்கே வேலை பறிபோய்விடுமோ என்ற பயத்தில், நான்காவதாக பிறந்த இந்த குழந்தையை காட்டில் விட்டு விட்டு வந்ததாக கூறி, போலீசாரையே திணற வைத்திருக்கின்றனர்.
தற்போது இந்த ஆசிரியர் தம்பதிக்கு போலீசார் பாடம் எடுக்க துவங்கியுள்ளனர்.
படிக்காத பாமர மக்கள் தான் அசட்டுத்தனமான விஷயங்களை செய்கின்றனர் என்றால், படித்த இளம் சமுதாயத்தை உருவாக்க வேண்டிய ஆசிரியர் பொறுப்பில் இருப்பவர்களும் இப்படி செய்திருப்பது தான், பலரையும் ஆவேசத்தில் ஆழ்த்தி இருக்கிறது.