நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு: 18 மாவட்டங்களில் இன்று கனமழை
நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு: 18 மாவட்டங்களில் இன்று கனமழை
ADDED : அக் 20, 2025 05:24 AM

சென்னை: 'வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ள நிலையில், தமிழகத்தில் இன்று, 18 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம்' என, சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் அமுதா தெரிவித்தார்.
நேற்று அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, விருதுநகர் மாவட்டம் கோவிலாங்குளம், அருப்புக்கோட்டை, கோவை மாவட்டம் மக்கினம்பட்டி ஆகிய இடங்களில் 14 செ.மீ., மழை பெய்துள்ளது.
வலுப்பெற வாய்ப்பு
இது தவிர, பல்வேறு மாவட்டங்களில், 17 இடங்களில், 8 செ.மீ.,க்கு மேல் மழை பதிவாகியுள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அதே பகுதியில் நீடித்தது.
இது, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, தென்கிழக்கு வங்கக்கடலில், நாளை ஒரு காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்புள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த, 48 மணி நேரத்தில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
இது, புயலாக மாறுமா என்பது, அடுத்தடுத்த நாட்களில் ஏற்படும் மாற்றங்கள் அடிப்படையிலேயே தெரியவரும். தமிழகத்தில் பெரும்பாலான இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும், இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
திருவள்ளூர், சென்னை, விழுப்புரம், செங்கல்பட்டு, கடலுார், மயிலாடு துறை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஆரஞ்ச் அலெர்ட்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டமாக காணப்படும்; சில இடங்களில், இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலுார் மாவட்டங்களில் சில இடங்களில், வரும் 23ல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதற்கான 'ஆரஞ்ச் அலெர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல், தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால், வரும் 23ம் தேதி வரை, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். ஏற்கனவே ஆழ்கடல் பகுதிக்கு சென்றுள்ள மீனவர்கள், நாளை காலைக்குள் கரை திரும்ப வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.