கோவில் நிதியை தவறாக பயன்படுத்தினால் நடவடிக்கை: அதிகாரிகளுக்கு அறநிலையத்துறை எச்சரிக்கை
கோவில் நிதியை தவறாக பயன்படுத்தினால் நடவடிக்கை: அதிகாரிகளுக்கு அறநிலையத்துறை எச்சரிக்கை
ADDED : நவ 24, 2025 02:45 AM

சென்னை: 'சட்டத்தின் பல்வேறு பிரிவு களில் அனுமதிக்கப் பட்ட செலவினங்களுக்கு மட்டுமே, கோவில் நிதியை பயன்படுத்த வேண்டும். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்' என, அதிகாரி களுக்கு ஹிந்து அறநிலையத்துறை எச்சரித்துள்ளது.
சென்னை கந்தகோட்டம் கோவில் கட்டுமானங்களை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி அருள் முருகன் இடம் பெற்ற அமர்வு விசாரித்தது.
சுற்றறிக்கை விசாரணையின் முடிவில், அவர்கள் பிறப்பித்த உத்தரவு:
கந்தகோட்டம் ஸ்ரீ முத்து குமாரசுவாமி கோவில் நிலத்தில் நடக்கும் கட்டுமான பணிகளை தொடரலாம். அந்த கட்டுமானங்களை, அறநிலையத்துறை சட்டப்படி பக்தர்கள் வசதிக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். வணிக ரீதியில் பயன்படுத்தக்கூடாது.
கோவில் நிதியில் வணிக வளாகங்கள் கட்டக்கூடாது என, தமிழகம் முழுதும் உள்ள கோவில்களுக்கு அறநிலையத்துறை கமிஷனர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். கோவில் நிதியில், வணிக ரீதியில் கட்டுமானங்களை மேற்கொள்ளும் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதும், சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட வேண்டும்.
இதைச் செய்ய தவறினால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதை ஏற்று, அறநிலையத்துறை கமிஷனர் ஸ்ரீதர், அனைத்து கோவில் இணை ஆணையர்கள் மற்றும் செயல் அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கை:
நீதிமன்ற உத்தரவின்படி, சட்டப்பிரிவு 86ன் கீழ் அங்கீகரிக்கப்பட்ட வரவு - செலவு திட்டத்தில், அனுமதிக்கப்பட்ட தொகை மற்றும் அறநிலையத்துறை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளில் அனுமதிக்கப்பட்ட செலவினங்களுக்கு மட்டுமே கோவில் நிதியை பயன்படுத்த வேண்டும்.
நடவடிக்கை இதுபோக இருப்பில் உள்ள கோவில் நிதி மற்றும் உபரி நிதியை பயன்படுத்தி கட்டடங்கள் கட்டும் போது, அறநிலையத்துறை சட்டப்பிரிவுகள் 35, 36, 36 ஏ, 36 பி, 66 ஆகியவற்றில் தெரிவிக்கப் பட்ட நோக்கத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
அதை மீறி செயல்படும் கோவில் அதிகாரிகள் மீது, சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு சுற்றறிக்கையில் கூறியுள்ளார்.

