ADDED : நவ 16, 2026 06:02 AM

சென்னை: 'தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இது, இன்று புயலாக மாறும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த மையத்தின் அறிக்கை: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று காலை நிலவரப்படி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இது, வடக்கு, வடமேற்கு திசையில் மேலும் நகர்ந்து, தெற்கு மற்றும் அதை ஒட்டியுள்ள மத்தியமேற்கு வங்கக்கடலில், இன்று, 'அக்வான்' புயலாக உருவாக வாய்ப்புள்ளது.
நாளை தீவிர புயலாக மாறி, அடுத்த இரண்டு நாட்களில், வடமேற்கு திசையில், ஆந்திர கடலோரப் பகுதி நோக்கி நகரக்கூடும். மேலும், தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தில் இருந்து, மாலத்தீவின் வடக்குப் பகுதிகள் வரை, ஒரு காற்றழுத்த தாழ்வு நிலவுகிறது. கேரள கடலோர பகுதிகளுக்கு அப்பால், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்ட ல சுழற்சி நிலவுகிறது.
அதனால், தமிழகத்தின் வடகடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்மாவட்டங்களில், இன்று லேசான மழை பெய்யலாம்.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில், நாளை இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதே மாவட்டங்களில், வரும், 18, 19ல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்பதால், 'ஆரஞ்ச் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும்; ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தின் வடகடலோர பகுதிகளில், இன்று மணிக்கு, 40 முதல், 50 கி.மீ., வேகத்திலும், இடையிடையே மணிக்கு, 60 கி.மீ., வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
