பாலாறில் ஆந்திர தொழிற்சாலை கழிவுநீர்: கண்டுகொள்ளாத மாசு கட்டுப்பாடு வாரியம்
பாலாறில் ஆந்திர தொழிற்சாலை கழிவுநீர்: கண்டுகொள்ளாத மாசு கட்டுப்பாடு வாரியம்
ADDED : நவ 09, 2025 12:30 AM

வேலுார்: பாலாறில் கலக்கும் ஆந்திர தொழிற்சாலை கழிவுநீரால், வேலுாரில் 50 கிராமங்களில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு, விவசாயம் கடும் சரிவை சந்தித்துள்ளது.
ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம், கணக்கநேரியில் தனியார் மாம்பழ கூழ் தொழிற்சாலை உள்ளது.
இந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுநீர், வேலுார் மாவட்டம், கண்டிப்பேடு அடுத்த உள்ளிப்புதுார் ஏரியில் கலந்து, பொன்னையாறு வழியாக பாலாற்றில் கலக்கிறது.
தற்போது மழை காரணமாக ஆந்திர ஏரிகளில் பாயும் நீர், தமிழக ஏரி, கால்வாய்க்கு வருகிறது. ஏரி நீர் மிகவும் மாசடைந்துஉள்ளதால், விவசாய பயிர்கள் மற்றும் கால்நடைகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.
மாம்பழ கூழ் தொழிற்சாலையின் கழிவுநீரால், உள்ளிப்புதுார் உட்பட, 50 கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நீரை பயன்படுத்தும் போது ஏராளமான நோய் பரவுகிறது. தோல் அரிப்பு ஏற்படுகிறது. ஏரிகளில் மீன்களும் செத்து மிதக்கின்றன.
மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க தமிழக விவசாயிகள் சங்கத்தினர், வேலுார் கலெக்டரிடம் நேற்று மனு அளித்தனர்.
விவசாயிகள் கூறியதாவது:
கேரளாவில் இருந்து கோழிக்கழிவுகளை தென்காசி, கோவை உள்ளிட்ட இடங்களில் கொட்டும் போது மக்களின் எதிர்ப்பால், அதை கேரள அரசு திரும்ப பெற்று கொள்கிறது. ஆனால், ஆந்திர அரசு தொடர்ந்து தனியார் நிறுவன கழிவுநீர், பாலாறில் கலப்பதை கண்டு கொள்வதில்லை.
இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு, விவசாயம் கடுமையான சரிவை சந்தித்துள்ளது. மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர். ஆனால், அதன் முடிவை அறிவிப்பதில் மெத்தன போக்கை கடைப்பிடிக்கின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

