'அனந்த் சாஸ்திரா' வான் பாதுகாப்பு அமைப்பு ரூ.30,000 கோடிக்கு வாங்க ராணுவம் டெண்டர்
'அனந்த் சாஸ்திரா' வான் பாதுகாப்பு அமைப்பு ரூ.30,000 கோடிக்கு வாங்க ராணுவம் டெண்டர்
ADDED : செப் 28, 2025 11:47 PM

புதுடில்லி: உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'அனந்த் சாஸ்திரா' வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளை கொள்முதல் செய்ய, 'பெல்' நிறுவனத்துக்கு நம் ராணுவம் 30,000 கோடி ரூபாய்க்கு டெண்டர் விடுத்துள்ளது.
அதிவிரைவு எதிர்வினை ஏவுகணையை மேம்படுத்தி, 'அனந்த் சாஸ்திரா' என்ற பெயரில் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பை டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம் உருவாக்கி உள்ளது.
'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையின்போது இந்த பாதுகாப்பு அமைப்பு முக்கிய பங்காற்றியது.
இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் சீன எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக, அனந்த் சாஸ்திரா வான் பாதுகாப்பு அமைப்பை நிலை நிறுத்த ராணுவம் முடிவு செய்துள்ளது.
எனவே, டி.ஆர்.டி.ஓ., மேம்படுத்திய இந்த ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை வாங்கி தயாரிப்பதற்காக பெல் நிறுவனத்திற்கு 30,000 கோடி ரூபாய்க்கு ராணுவம் ஒப்பந்தம் கொடுத்துள்ளது. பாதுகாப்புத் துறையில் உள்நாட்டு மயமாக்கலுக்கு இந்நடவடிக்கை பெரும் ஊக்கமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிரிகளின் வான்வழி அச்சுறுத்தல்களை முறியடிக்க நம் விமானப்படையுடன் இணைந்து, ஆகாஷ் மற்றும் பிற சிறிய வான் பாதுகாப்பு அமைப்புகளை நம் ராணுவம் பயன்படுத்தி வருகிறது.
இந்நிலையில், 'அனந்த் சாஸ்திரா' தயாரிக்கப்பட்டு இந்திய ராணுவத்தில் இணைக்கப்பட்டால், நம் நாட்டின் வான் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கும்.
'அனந்த் சாஸ்திரா' வான் பாதுகாப்பு அமைப்பு ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக எடுத்துச் செல்ல முடியும். அத்துடன் 30 கி.மீ., சுற்றுவட்டாரத்தில் எதிரிகளின் இலக்குகள் நுழைந்தால், உடனடியாக கண்டறிந்து, அதை தாக்கி அழிக்கும் வல்லமை பெற்றது.
பகல் மற்றும் இரவு என எந்த நேரத்திலும் துல்லியமாக செயல்படக்கூடியது.