டில்லியில் நீதிமன்றங்கள், சிஆர்பிஎப் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
டில்லியில் நீதிமன்றங்கள், சிஆர்பிஎப் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
UPDATED : நவ 18, 2025 04:08 PM
ADDED : நவ 18, 2025 04:05 PM

நமது டில்லி நிருபர்
டில்லியில் உள்ள நீதிமன்றங்களுக்கும் இரண்டு சிஆர்பிஎப் பள்ளிகளுக்கும் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். இது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டில்லியின், துவாரகா மற்றும் பிரசாந்த் விகார் பகுதிகளில் உள்ள 2 சிஆர்பிஎப் பள்ளிகள் மற்றும் சாகேத், பட்டியாலா, ரோகினி ஆகிய 3 நீதிமன்றங்களுக்கும் மர்ம நபர்கள் மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பள்ளிகள், நீதிமன்ற வளாகம் மற்றும் வழக்கறிஞர் அறைகளில் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் சோதனை நடத்தினர். சோதனையில் சந்தேகப்படும் வகையில் எந்த பொருட்களும் கண்டறியப் படவில்லை. இதனால் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, டில்லியில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
நீதிமன்றங்களின் விசாரணை 2 மணி நேரங்கள் தாமதமாக தொடங்கியது. கடந்த நவம்பர் 10ம் தேதி, டில்லி செங்கோட்டை அருகே தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டதை கருத்தில் கொண்டு, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட இடங்களில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது என டில்லி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

