கூடுதலாக 30 மொழிகளில் திருக்குறள்: மத்திய செம்மொழி நிறுவனம் அறிவிப்பு
கூடுதலாக 30 மொழிகளில் திருக்குறள்: மத்திய செம்மொழி நிறுவனம் அறிவிப்பு
UPDATED : டிச 08, 2025 12:38 AM
ADDED : டிச 08, 2025 12:10 AM

வாரணாசி: திருக்குறளை மேலும் 30 மொழிகளுக்கு கொண்டு செல்லும் வகையில், மத்திய செம்மொழி தமிழ் நிறுவனம் புதிய மொழிபெயர்ப்பு முயற்சியைத் துவங்கியுள்ளது.
இது குறித்து மத்திய செம்மொழி தமிழ் நிறுவன இயக்குநர் சந்திரசேகரன் கூறியதாவது: தமிழின் தொன்மையான நுாலான திருக்குறள், ஏற்கனவே 34 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது.
பேசும் மொழி
அதில், 25 இந்திய மொழிகளிலும், ஒன்பது உலக மொழிகளிலும் வெளியாகி இருக்கிறது. வரும் 2026 பொங்கலுக்குள், மேலும் 30 புதிய மொழிகளில் திருக்குறளை மொழிபெயர்க்கும் பணி முடியும். இதில், 23 இந்திய மொழிகள், ஏழு உலக மொழிகள் அடங்கும்.
உலகம் முழுதும் தமிழ் பார ம்பரியத்தை பரப்பும் இலக்குடன், அடுத்த ஆண்டு ஆகஸ்டுக்குள் திருக்குறளை, 100 மொழிகளுக்கு கொண்டு செல்லும் திட்டம் செயல் படுத்தப்படுகிறது.
நம் அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் தமிழ், ஹிந்தி, கன்னடம் என, 22 மொழிகள் உள்ளன. ஆனால், அட்டவணையில் இல்லாத பல மொழிகளிலும் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது.
உதாரணமாக, நீலகிரி மாவட்டத்தின் இருளர் இன மக்கள் பேசும் மொழியிலும் திருக்குறளை மொழிபெயர்த்துள்ளோம். வரவிருக்கும் திட்டங்களில், ஜெர்மன், பிரெஞ்சு, ஸ்பானிஷ் உள்ளிட்ட முக்கிய வெளிநாட்டு மொழிகளுக்கும் குறள் மொழிபெயர்ப்பு துவங்கப்பட உள்ளது.
மொழிபெயர்ப்பு
சமீபத்தில் நான்காவது காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தொல்காப்பியம் மொழிபெயர்ப்பு நுால்களை வெளியிட்டார். இந்நுால் ஒடியா, அசாமி, உருது, துளு உள்ளிட்ட 10 மொழிகளில் வெளியாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

