தமிழக தொழில் வளர்ச்சிக்கு திட்டங்களை வாரி வழங்கும் மத்திய அரசு; கோட்டை விடும் பா.ஜ.,
தமிழக தொழில் வளர்ச்சிக்கு திட்டங்களை வாரி வழங்கும் மத்திய அரசு; கோட்டை விடும் பா.ஜ.,
ADDED : அக் 01, 2025 06:31 AM

சென்னை : 'தமிழக தொழில் வளர்ச்சிக்காக, தோல் அல்லாத காலணி துறை, ஜவுளித்துறை, கப்பல் கட்டும் தளங்கள்' என, மத்திய அரசு பல்வேறு திட்டங்களை வழங்கினாலும், அவற்றை மக்களிடம் சேர்க்கும் பணியில், பா.ஜ., நிர்வாகிகள் கோட்டை விடுவது, அக்கட்சியினரிடம் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக பொருளாதாரத்தை, வரும் 2030க்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அதாவது, 86 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள, பொருளாதாரமாக மாற்ற, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, தொழில் முதலீடுகளை ஈர்க்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழக தொழில் துறையை மேம்படுத்த மாநில அரசு மட்டுமின்றி, மத்திய அரசும் பல்வேறு உதவிகளை வழங்குகிறது.
ஜவுளித் துறையை மேம்படுத்த விருதுநகர் மாவட்டம், இ.குமாரலிங்கபுரத்தில், 'பி.எம்.மித்ரா' எனப்படும் பிரதமரின் மாபெரும் ஜவுளி பூங்காவை, 1,894 கோடி ரூபாயில், 1,052 ஏக்கரில் அமைக்க, மத்திய ஜவுளி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு, 500 கோடி ரூபாய் மானியத்தை, ஜவுளி அமைச்சகம் வழங்க உள்ளது.
தோல் அல்லாத காலணி துறையை சேர்ந்த பல நிறுவனங்கள், கள்ளக்குறிச்சி, பெரம்பலுார் உள்ளிட்ட மாவட்டங்களில், பல நுாறு கோடி ரூபாய் முதலீட்டில், ஆலைகளை அமைத்து வருகின்றன. இதற்கு தமிழக வழிகாட்டி நிறுவனம் மட்டுமின்றி, இந்திய தோல் பொருட்கள் கழகமும், வெளிநாட்டு நிறுவனங்களை சந்தித்து, முதலீட்டை ஈர்க்க பேச்சு நடத்துகிறது.
மத்திய அரசின் கொச்சின் ஷிப்யார்டு நிறுவனம், 15,000 கோடி ரூபாய் முதலீட்டிலும், மசகான் டாக் ஷிப்பில்டர்ஸ் நிறுவனம், 15,000 கோடி ரூபாய் முதலீட்டிலும் துாத்துக்குடியில் கப்பல் கட்டும் தளங்களை அமைக்க, தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன.
ஆனால், மத்திய அரசு செய்யும் உதவிகள் எதையும், மக்களிடம் எடுத்து செல்ல பா.ஜ., தலைமை தவறுகிறது என்பது, அக்கட்சி தொண்டர்களின் ஆதங்கமாக உள்ளது.
இதுகுறித்து, பா.ஜ.,வினர் கூறியதாவது:
தமிழகத்திற்கு வரும் முதலீடுகளை குஜராத், உ.பி., என, பா.ஜ., ஆளும் மாநிலங்களுக்கு, மத்திய அரசு திசை திருப்புவதாக, தி.மு.க.,வினர் கூறுகின்றனர்.
இதில், ஒரு சதவீதம் கூட உண்மை இல்லை. தமிழக ஜவுளி, தோல் பொருட்கள், கப்பல், எலக்ட்ரானிக்ஸ் என, பல்வேறு தொழில் துறைகளின் வளர்ச்சிக்கு மத்திய அரசு உதவுகிறது. இதன் காரணமாகவே, பிரதமரின் ஜவுளி பூங்கா, கப்பல் கட்டும் தளங்கள் தமிழகத்திற்கு வந்துள்ளன.
ஜவுளி பூங்காவில் மட்டும், ஒரு லட்சம் வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில், 10,000 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட உள்ளன. இரு கப்பல் கட்டும் தளங்களால், 55,000 வேலை வாய்ப்புகள் உருவாக உள்ளன.
இவை, தங்களின் முயற்சியால், தமிழகம் வந்துள்ளதாக, தி.மு.க.,வினர் கூறுகின்றனர். ஆனால், மத்திய அரசு வழங்கிய திட்டங்களை, தமிழக மக்களிடம் சேர்க்கும் பணியில், பா.ஜ.,வினர் கோட்டை விடுகின்றனர்.
சட்டசபை தேர்தலுக்கு, இன்னும் ஏழு மாதங்களே உள்ளன. எனவே, மத்திய அரசு வழங்கிய திட்டங்களின் விபரங்களை, பா.ஜ., நிர்வாகிகள் வீடுதோறும் சென்று, மக்களிடம் சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.