காங்கிரஸ் எம்பிக்கள் உடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு: பின்னணியில் நடந்தது இதுதான்!
காங்கிரஸ் எம்பிக்கள் உடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு: பின்னணியில் நடந்தது இதுதான்!
UPDATED : செப் 27, 2025 04:25 PM
ADDED : செப் 27, 2025 04:21 PM

சென்னை: திமுக - காங்கிரஸ் இடையே ஏற்பட்ட மோதலுக்கு தீர்வு காணும் நோக்கத்துடன், இன்று காங்கிரஸ் எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேச்சு நடத்தினார்.
சமீபத்தில் கரூர் நகர மகளிர் காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அந்தப் படத்தை தன்னுடைய சமூக வலைதள கணக்கில் செந்தில் பாலாஜி வெளியிட்டிருந்தார். இது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மாநில மகளிர் காங்கிரஸ் நிர்வாகி ஹசீனா சையத் ஆட்சேபம் தெரிவித்தார்.
கரூர் தொகுதி சேர்ந்த காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, செந்தில் பாலாஜிக்கு கடுமையான கண்டனம் தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டார். ஒரே கூட்டணியில் இருக்கும் இன்னொரு கட்சியின் நிர்வாகியை, ஆளுங்கட்சி இழுத்துக் கொள்வது நாகரீகம் இல்லாதது என்று காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் பேட்டியளிக்க ஆரம்பித்தனர்.
நாளுக்கு நாள் சர்ச்சை வளர்ந்து கொண்டே சென்ற நிலையில், இதற்கு முடிவு கட்ட எண்ணிய திமுக தலைமை, காங்கிரஸ் எம்பிக்களுக்கு அழைப்பு விடுத்தது. அதன்படி இன்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை, கரூர் எம்பி ஜோதிமணி, கன்னியாகுமரி எம்பி விஜய் வசந்த், திருநெல்வேலி எம்பி ராபர்ட் ப்ரூஸ் உள்ளிட்டோருடன் சென்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார்.
தேர்தல் நெருங்கி வரும் காலத்தில் இரு கட்சி தொண்டர்கள் மத்தியில் விரோதம் ஏற்படாத வகையில் இரு தரப்பும் நடந்து கொள்வது பற்றி கூட்டத்தில் பேசப்பட்டது. கூட்டம் முடிந்து வெளியே வந்த கரூர் எம்பி ஜோதிமணி, எங்களது தொகுதி பிரச்சினைகள் தொடர்பாக முதல்வரிடம் கருத்துக்களை தெரிவித்துள்ளோம் என்றார்.
கூட்டணிக் கட்சிகளுக்கு இடையிலான பிரச்சினை குறித்து அவர் கூறுகையில், ' அரசியலில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பிரச்சனைகள் வரத்தான் செய்யும். ஆனால் அத்தகைய பிரச்சினைகள் நீண்ட நாள் நீடித்திருக்காது' என்றார். 'இப்போதைக்கு கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை' என்று அவர் தெரிவித்தார்.
''எம்பிக்களின் தொகுதிகளில் சிறு சிறு பிரச்சனைகள் இருந்தன. அவை பற்றி முதல்வரிடம் தெரிவித்தோம். அவற்றை சரி செய்து தருவதாக முதல்வர் தெரிவித்துள்ளார்,'' என்று மாநில தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்தார்.