ஒரே நிறுவனத்துக்கு ஒப்பந்த பணி: மவுனம் சாதிக்கும் கோவில் நிர்வாகம்
ஒரே நிறுவனத்துக்கு ஒப்பந்த பணி: மவுனம் சாதிக்கும் கோவில் நிர்வாகம்
ADDED : ஆக 14, 2026 04:48 AM

சென்னை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகிக்கு நெருக்கமான நிறுவனத்துக்கு, தொடர்ந்து ஒப்பந்த பணி வழங்கப்படுவது குறித்த கேள்விக்கு, கோவில் நிர்வாகம் தகவல் வழங்க மறுத்து விட்டது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ஐந்தாம் பிரகாரம் பழுது பார்த்தல், நகரும் தடுப்புகள் மற்றும் கற்பூர விளக்கு ஏற்றுவதற்கான இரும்பு மேடை அமைத்தல், மகளிர் கழிப்பறைகள் கட்டுதல், மின்சார பணிகள், மரங்களை சுற்றி பாதுகாப்பு சுவர்கள், கழிவுநீர் தொட்டி மற்றும் நடைபாதை அமைத்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு உள்ளன.
இந்த ஒப்பந்த பணிகள், 'அஸ்வினி கன்ஸ்ட்ரக் ஷன்' எனும் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, கடந்த ஜூன் மாதம் தகவல் அறியும் சட்டத்தின் கீழ், சில தகவல்கள் கோரி, ஆலய வழிபடுவோர் சங்கத் தலைவர் டி.ஆர்.ரமேஷ் விண்ணப்பித்தார். ஆனால், அவருக்கு தகவல் மறுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, அவர் கூறியதாவது: திருவண்ணாமலை கோவில் நிர்வாகிக்கு நெருக்கமான, 'அஸ்வினி கன்ஸ்ட்ரக் ஷன்' நிறுவனத்துக்கு, தொடர்ந்து ஒப்பந்த பணி வழங்கப்பட்டுள்ளது. அந்த பணிகள் சரிவர நடப்பதில்லை.
இந்நிலையில், இப்பணிகளை குறிப்பிட்டு, தகவல் உரிமை சட்டத்தின் கீழ், சில தகவல்களை கேட்டு விண்ணப்பித்தேன். ஆனால், அவற்றுக்கு தகவல் வழங்க மறுத்து விட்டனர். இதுபோல் கோவில் தொடர்பான பல ஆர்.டி.ஐ., மனுக்களுக்கு முறையான தகவல் வழங்குவதே இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
