இந்திய விமானப்படைக்கு மேலும் 97 தேஜஸ் போர் விமானங்கள்: மத்திய அரசு ஒப்பந்தம்
இந்திய விமானப்படைக்கு மேலும் 97 தேஜஸ் போர் விமானங்கள்: மத்திய அரசு ஒப்பந்தம்
UPDATED : செப் 25, 2025 11:03 PM
ADDED : செப் 25, 2025 04:23 PM

புதுடில்லி: இந்திய விமானப்படைக்கு 97 இலகு ரக தேஜஸ் போர் விமானங்கள் வாங்க ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்துடன் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் போட்டுள்ளது. இதில் 68 விமானங்கள் ஒற்றை இருக்கை கொண்டவையாகவும், 29 போர் விமானங்கள் இரட்டை இருக்கை கொண்டவையாகவும் இருக்கும்.
இந்திய விமானப்படையில் பல ஆண்டுகளாக சேவையாற்றி வரும் மிக்-21 ரக போர் விமானங்களுக்குப் பதிலாக, தேஜஸ்எம்கே1ஏ ரக போர் விமானங்கள் பயன்படுத்தப்பட இருக்கிறது. கடந்த 2021 பிப்ரவரியில், இந்திய விமானப்படைக்கு 83 தேஜஸ் எம்கே-1ஏ விமானங்களை கொள்முதல் செய்ய ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் உடன் ரூ. 48,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டது.
இந்நிலையில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு, ரூ.62,370 கோடியில் மேலும் 97 தேஜஸ் எம்கே -1ஏ விமானங்களை வாங்க விமானப்படை முடிவு செய்தது. இதற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்து இருந்தது.
இதனைத் தொடர்ந்து இந்த போர் விமானங்களை வாங்குவதற்காக, அதனை தயாரிக்கும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துடன் இன்று ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தின்படி UTTAM Active Electronically Scanned Array (AESA) control surface actuators, கவச், ரேடார் உள்ளிட்ட 67 சதவீத உபகரணங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு விமானத்தில் பொருத்தப்பட உள்ளன. மேலும் 67 புதிய உபகரணங்களும் பொருத்தப்பட உள்ளன.
விமானத்துக்கு தேவையான உபகரணங்கள் இந்தியாவைச் சேர்ந்த 105 நிறுவனங்களிடம் நேரடியாக கொள்முதல் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு நேரடியாகவு,ம் மறைமுகமாகவும் 11,750 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். போர் விமானங்கள் விமானப்படை இடம் ஒப்படைக்கும் பணி 2027 - 2028 துவங்கி அடுத்த ஆறு ஆண்டுகளுக்குள் நிறைவு பெறும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.