முதல்வர் மாற்றத்தில் ரகசிய ஒப்பந்தம்: உடைத்துச் சொன்னார் கர்நாடகா துணை முதல்வர்
முதல்வர் மாற்றத்தில் ரகசிய ஒப்பந்தம்: உடைத்துச் சொன்னார் கர்நாடகா துணை முதல்வர்
ADDED : நவ 25, 2025 06:58 PM

பெங்களூரு: ''முதல்வர் மாற்றம் குறித்து பொது வெளியில் பேச விரும்பவில்லை. இந்த விவகாரம், எங்களில் ஒரு சிலருக்கு இடையிலான ரகசிய ஒப்பந்தம்,'' என்று கர்நாடகா துணை முதல்வர் டி.கே சிவகுமார் கூறி உள்ளார்.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையாவுக்கும், துணை முதல்வர் டி.கே. சிவகுமாருக்கும் இடையே மோதல் முற்றி வருகிறது. அண்மையில் டில்லி சென்ற சிவகுமார் ஆதரவாளர்கள், முதல்வர் மாற்றம் குறித்து கட்சி தலைமைக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர்.
இருவருக்கும் இடையே ஆட்சி அதிகாரம் தொடர்பாக மோதல் வலுத்து வரும் சூழலில், கட்சி தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன், மேலிடம் வழங்கும் வழிகாட்டுதல்படி நடப்பேன், இந்த பிரச்னைக்கு கட்சி தலைமை தான் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று முதல்வர் சித்தராமையா கூறி இருந்தார்.
இந் நிலையில், கர்நாடகாவில் நடந்து வரும் குழப்பம் குறித்து துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கூறியதாவது;
முதல்வர் மாற்றம் குறித்து நான் பகிரங்கமாக, பொது வெளியில் விவாதிக்க விரும்பவில்லை. என்னை முதல்வராக்க நான் கேட்கவில்லை. ஏன் எனில், இது எங்களில் சிலருக்கு இடையிலான ரகசிய ஒப்பந்தம். நான் மனசாட்சியை நம்புகிறேன். கட்சியை எந்த விதத்திலும் பலவீனப்படுத்த விரும்பவில்லை. கட்சி இருக்குமிடத்தில் நாங்கள் அனைவரும் இருப்போம்.
இவ்வாறு டி.கே. சிவகுமார் தெரிவித்தார்.

