பெல்ஜியத்தில் டிரோன்கள் ஊடுருவல்; படைகளை அனுப்ப பிரிட்டன் உத்தரவு
பெல்ஜியத்தில் டிரோன்கள் ஊடுருவல்; படைகளை அனுப்ப பிரிட்டன் உத்தரவு
ADDED : நவ 09, 2025 07:37 PM

லண்டன்: பெல்ஜியத்தில் சந்தேகத்திற்கிடமான டிரோன்கள் ஊடுருவிய நிலையில், ஆயுதங்களையும், ராணுவ வீரர்களையும் உதவிக்கு அனுப்ப பிரிட்டன் உத்தரவிட்டுள்ளது.
உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவுக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதுமட்டுமில்லாமல், இந்தப் போரில் ரஷ்யாவுக்கு எதிராக போரிட, உக்ரைனுக்கு ஆயுதங்கள் மற்றும் ராணுவ உதவிகளையும் வழங்கி வருகின்றன. எனவே, ஐரோப்பிய நாடுகள் மீது எந்த நேரத்தில் ரஷ்யா டிரோன் தாக்குதலை நடத்தலாம் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எச்சரித்திருந்தார்.
இந்த நிலையில், பெல்ஜியத்தின் முக்கிய விமான நிலையமான ஜாவன்டெம் விமான நிலையம் மற்றும் ராணுவ தளம் அருகே கடந்த 6ம் தேதி, சந்தேகத்திற்கிடமான டிரோன்கள் பறந்துள்ளன. இதையடுத்து, விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. இந்த டிரோன்களை ரஷ்யா அனுப்பியிருக்கலாம் என்று ஐரோப்பிய நாடுகளிடையே சந்தேகம் எழுந்துள்ளது.
இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பெல்ஜியத்திற்கு ஆயுதங்களையும், ராணுவ படைகளையும் அனுப்ப பிரிட்டன் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரிட்டர் ராணுவ தலைவர் ரிச்சர்ட் நைட்டன் கூறுகையில், 'பெல்ஜியம் தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று, அந்த நாட்டுக்கு ஆயுதங்களும், ராணுவ படைகளும் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்துமீறிய டிரோன்களின் ஊடுருவலுக்கு ரஷ்யா தான் காரணம் என்பதற்கான நேரடி காரணம் இல்லாவிட்டாலும், ரஷ்யாவின் தூண்டுதலின்பேரில் இது நடந்திருக்கலாம்,' என்றார்.

