இருக்கைக்கு கூடுதல் கட்டணம் வசூல்; எமிரேட்ஸ் விமான நிறுவனத்துக்கு அபராதம்
இருக்கைக்கு கூடுதல் கட்டணம் வசூல்; எமிரேட்ஸ் விமான நிறுவனத்துக்கு அபராதம்
ADDED : அக் 30, 2025 12:39 AM

மும்பை: விமானத்தில், இலவச இருக்கைகள் இருந்தும் அதை மறைத்து இருக்கைக்கு என்று, 'பிரீமியம்' தொகை என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலித்த, 'எமிரேட்ஸ்' விமான நிறுவனத்துக்கு அபராதம் விதித்ததை மஹாராஷ்டிரா நுகர்வோர் கமிஷன் உறுதி செய்தது.
மஹாராஷ்டிராவின் நவி மும்பையைச் சேர்ந்தவர் டாக்டர் நந்தி. இவர் தன் மனைவி உடன் கடந்த, 2017, ஆகஸ்டில் மும்பையிலிருந்து அமெரிக்காவின் நியூயார்க் செல்ல, 'எமிரேட்ஸ்' விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய முயன்றார்.
இணையதளத்தில் டிக்கெட் பதிவு செய்தபோது, பல இருக்கைகள் 'பிரீமியம் இருக்கை' எனக் குறிக்கப்பட்டிருந்தன.
இலவச இருக்கைகள் குறைவாக உள்ளன என்று நிறுவனம் தெரிவித்ததால், நந்தி கூடுதலாக, 7,200 செலுத்தி இரண்டு இருக்கைகளை முன்பதிவு செய்தார். பயண நாள் அன்று, சில பயணியர் இலவச இருக்கைகள் பெற்றிருந் ததை இருவரும் அறிந்தனர்.
இதனால் தங்களை ஏமாற்றியதாக, மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம், 'விமான நிறுவனம், பிரீமியம் இருக்கை என்ற பெயரில் வசூலித்த, 7,200 ரூபாயை, 6 சதவீத வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டும்.
'மேலும், நுகர்வோரின் மனவேதனைக்காக, 5,000 ரூபாய் மற்றும் வழக்கு செலவுக்காக, 3,000 ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்' என, உத்தரவிட்டது.
இதை எதிர்த்து மாநில நுகர்வோர் கமிஷனில் விமான நிறுவனம் மேல்முறையீடு செய்தது. அந்த வழக்கில் சமீபத்தில் தீர்ப்பு வழங்கிய கமிஷன், மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்தது.

