சென்னை ஏரிகளில் அளவுக்கு அதிகமாக நீர் சேமிப்பு; பேரிடர் மேலாண்மை விதி மீறப்படுவதால் அதிர்ச்சி
சென்னை ஏரிகளில் அளவுக்கு அதிகமாக நீர் சேமிப்பு; பேரிடர் மேலாண்மை விதி மீறப்படுவதால் அதிர்ச்சி
ADDED : அக் 30, 2025 08:00 AM

பேரிடர் மேலாண்மை விதிகளை முறையாக பின்பற்றாமல், குடிநீர் ஏரிகளில் கூடுதல் நீரை, நீர்வளத்துறை சேமித்துள்ளதால், 2015ல் நடந்தது போல் சென்னைக்கு பேராபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ஆபத்தை உணராமல், மாநகராட்சிக்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையில், நீர் வளத்துறையினர் செயல்படுவதாக, பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், தேர்வாய் கண்டிகை ஏரிகள் வாயிலாக சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இவை மொத்தம், 11.75 டி.எம்.சி., கொள்ளளவு உடையவை. தற்போது, இவற்றில் 9.27 டி.எம்.சி., இருப்பு உள்ளது. அதன்படி, 3.64 டி.எம்.சி., கொள்ளளவுள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் 2.94 டி.எம்.சி.,யும், 3.30 டி.எம்.சி., கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 2.76 டி.எம்.சி.,யும் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது.
மேலும், 3.23 டி.எம்.சி., கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் 2.38 டி.எம்.சி.,யும், 1.08 டி.எம்.சி., கொண்ட சோழவரம் ஏரியில் 0.78 டி.எம்.சி.,யும், 0.50 டி.எம்.சி., கொள்ளளவு கொண்ட தேர்வாய் கண்டிகை ஏரியில், 0.44 டி.எம்.சி., இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. தற்போதுள்ள நீரை வைத்து, அடுத்தாண்டு வடகிழக்கு பருவமழை வரை, சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும்.
வடகிழக்கு பருவமழை நேரத்தில், குடிநீர் ஏரிகளில் பேரிடர் மேலாண்மை விதிகளை பின்பற்ற வேண்டும். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய நீர்வள ஆணையம், அணைகள் பாதுகாப்பு இயக்கம் ஆகியவை வெளியிட்டுள்ளன. அதன்படி, வடகிழக்கு பருவமழை நேரத்தில், பூண்டி, செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில், முழு கொள்ளளவில் இருந்து தலா, 1 டி.எம்.சி., அளவிற்கு நீர் இருப்பை காலியாக வைக்க வேண்டும். சோழவரம், தேர்வாய்கண்டிகை ஏரிகளில், மொத்த கொள்ளளவில் 25 சதவீதம் வரை நீர் இருப்பை காலியாக வைக்க வேண்டும்.
அப்போதுதான், நீர்ப்பிடிப்பு பகுதிகளில், 20 செ.மீ.,க்கு மேல் மழைபெய்து நீர்வரத்து அதிகரித்தாலும், ஏரியின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். கரைகள், ஷட்டர்கள் உடைதல் உள்ளிட்ட சம்பவங்களை தவிர்த்து, ஏரிகளின் கீழ்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியும். ஆனால், பேரிடர் மேலாண்மை விதிகளை பின்பற்றாமல், புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில், அதிக அளவில் நீர் சேமிக்கப்பட்டு உள்ளது. கனமழை கொட்டும்பட்சத்தில், அதிகப்படியான நீரை ஒரே நேரத்தில் வெளியேற்றினால், செம்பரம்பாக்கம் ஏரியால், 2015ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளச்சேத சம்பவங்கள் மீண்டும் நிகழும் ஆபத்து உள்ளது.இதனால், சென்னைக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும்.
ஆனால், இந்த விதிமுறையை நீர்வளத்துறை முறையாக கடைபிடிக்கவில்லை. சென்னை மாநகராட்சி அதிகாரிகள், சென்னை மண்டல நீர்வளத்துறை அதிகாரிகள் இடையே ஏற்பட்டுள்ள மோதல்தான் இதற்கு காரணம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
நமது நிருபர்

