நியாயமான நிதி பகிர்வே உண்மையான கூட்டாட்சி தத்துவம்: தங்கம் தென்னரசு
நியாயமான நிதி பகிர்வே உண்மையான கூட்டாட்சி தத்துவம்: தங்கம் தென்னரசு
ADDED : செப் 08, 2025 09:30 PM

கோவை:நிதி பகிர்வில் மத்திய அரசு, பெரியண்ணன் மனப்பாங்குடன் நடந்து கொள்கிறது. நிதி பகிர்வுக்கான தன்னாட்சி பெற்ற அமைப்பில், அடிப்படை கட்டமைப்பு மாற்றம் தேவை. நியாயமான நிதி பகிர்வே உண்மையான கூட்டாட்சி தத்துவம் என தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
கோவையில் நடந்து வரும், 'இந்தியா டுடே தென்னிந்திய மாநாடு - 2025' நிகழ்வில், தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:
தமிழகத்தைப் பொறுத்தவரை, திட்டங்கள், செலவுகளுக்காக மூன்றில் இரண்டு பங்கை மாநில அரசே ஏற்க வேண்டியுள்ளது. ஆனால், வருவாய் பங்கீட்டில் மூன்றில் ஒரு பங்கே கிடைக்கிறது. மத்திய அரசு, தான் ஆளும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலத்துக்கு வழங்குவதில்லை. சரி செய்ய முடியாத அளவுக்கு நிதி சிக்கல்களை, தற்போதைய நிதி பகிர்வு முறை உருவாக்கியுள்லது.
மும்மொழிக் கொள்கையை ஏற்காததால், சமக்ரசிக்ஷா திட்டத்துக்கான 4,000 கோடியை வழங்கவில்லை. பேரிடர் மேலாண்மை நிதியில் ஆண்டுதோறும் வழங்க வேண்டிய நிதி மட்டும் வருகிறது. பேரிடரால் ஏற்பட்ட உண்மையான இழப்புக்கு உரிய நிவாரணம் தருவதில்லை.
மத்திய - மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் திட்டங்களில், மத்திய அரசின் பங்களிப்பு 75 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. பேரிடர்களுக்கு நிரந்தரத் தீர்வுக்கான கட்டமைப்பை உருவாக்க, அதிக முதலீடு தேவைப்படும். ஆனால், மத்திய அரசு தருவதில்லை.
எந்த பொருளுக்கு எவ்வளவு வரி என்பதை மாநிலம் தீர்மானித்து வந்தது. ஜி.எஸ்.டி.,க்குப் பின் அது, பறிக்கப்பட்டு விட்டது. ஆனால், மத்திய அரசுக்கு செஸ், சர்சார்ஜ் என கூடுதல் வருவாய் கிடைக்கிறது.வரி குறைப்புக்கு, சீரமைப்புக்கு நாங்கள் எதிரானவர்கள் இல்லை. உண்மையிலேயே நுகர்வோருக்கு இதன் பயன் சென்றடையும் என்றால் வரவேற்கிறோம். ஆனால், பாதிக்கப்படுவது மாநிலங்களே. அதற்கு உரிய இழப்பீடு தர வேண்டும்.
இழப்பு ஏற்படும்
ஜி.எஸ்.டி., அடுக்குகள் மாற்றியமைக்கப்பட்டதால், தமிழகத்துக்கு ரூ.5 ஆயிரம் கோடி முதல் ரூ.10 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்படும் என எதிர்பார்க்கிறோம். தமிழகத்தின் வருவாயில் பெரும் பகுதி ஜி.எஸ்.டி.,யில் இருந்து கிடைக்கிறது. இப்போது திடீரென வருவாய் இழப்பை எப்படி ஈடுகட்டுவது.
ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், மாநிலங்கள் வாக்களிக்கலாம் என மத்திய நிதியமைச்சர் கூறுகிறார். முடிவெடுத்தபின், ஒப்புதலுக்காகவே கவுன்சில் கூட்டப்படுகிறது. முடிவெடுக்கும் முன், மாநிலங்களிடம் ஆலோசிக்கலாமே.
நிதி பகிர்வில் மத்திய அரசு, பெரியண்ணன் மனப்பாங்குடன் நடந்து கொள்கிறது. நிதி பகிர்வுக்கான தன்னாட்சி பெற்ற அமைப்பில், அடிப்படை கட்டமைப்பு மாற்றம் தேவை. நியாயமான நிதி பகிர்வே உண்மையான கூட்டாட்சி தத்துவம்.இவ்வாறு, அவர் கூறினார்.