'ஹிஜாப்' சர்ச்சைக்கு காரணமான பெண் டாக்டர் பணியில் சேர மறுப்பு
'ஹிஜாப்' சர்ச்சைக்கு காரணமான பெண் டாக்டர் பணியில் சேர மறுப்பு
ADDED : டிச 19, 2025 12:19 AM

பாட்னா: பீஹார் முதல்வர் நிதிஷ் குமார், சர்ச்சையில் சிக்க காரணமான முஸ்லிம் பெண் டாக்டர், கடும் மன உளைச்சலில் இருப்பதால் அரசு பணியில் சேர மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பீஹார் தலைநகர் பாட்னாவில் கடந்த 15ம் தேதி, 1,283 ஆயுஷ் டாக்டர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் நிதிஷ் குமார் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், 10 டாக்டர்களுக்கு, முதல்வர் நிதிஷ் குமார் நேரடியாக பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
அப்போது, நுஸ்ரத் பர்வீன் என்ற பெண் டாக்டர், 'ஹிஜாப்' எனப்படும், முகத்தை மூடும் துணியை அணிந்து பணி ஆணை பெற வந்தார். அந்த பெண்ணின் ஹிஜாபை நிதிஷ் குமார் சுட்டிக்காட்டி விலக்கும்படி செய்கை செய்தார். தொடர்ந்து அந்த பெண் டாக்டரின் அனுமதியின்றி, நிதிஷ் குமாரே ஹிஜாபை விலக்கினார். இது சர்ச்சையானது.
முதல்வரின் செயலுக்கு, எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், நுஸ்ரத் பர்வீன், மாநில அரசின் ஆணைப்படி நாளை பணியில் சேர வேண்டும். ஆனால், ஹிஜாப் விவகாரம் பெரிதானதால் அவர் கடும் மன உளைச்சலில் இருப்பதாக கூறப்படுகிறது.
மேற்கு வங்கத்தின் கொல்கட்டாவில் உள்ள அரசு பல்கலையில் பேராசிரியையாக நுஸ்ரத் பர்வீன் பணியாற்றும் நிலையில், தனியார் 'டிவி'க்கு அவரது சகோதரர் அளித்த பேட்டியில், 'என் சகோதரி, அரசு பணியில் சேர வேண்டாம் என்பதில் உறுதியாக உள்ளார். 'எனினும், குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அவரை சமரசம் செய்து வருகிறோம். மற்றவரின் தவறுக்கு நீ ஏன் பாதிக்கப்பட வேண்டும் என கூறி வருகிறோம்' என்றார்.

