சிறுபான்மையினர் ஓட்டுக்காக ஹிந்துக்களின் உரிமை பறிப்பு; ஹிந்து அமைப்புகள் கண்டனம்
சிறுபான்மையினர் ஓட்டுக்காக ஹிந்துக்களின் உரிமை பறிப்பு; ஹிந்து அமைப்புகள் கண்டனம்
ADDED : டிச 04, 2025 01:30 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் பெருமாள் கோயில்பட்டி கோயில் இடத்தில் தீபம் ஏற்றுவதற்கு உயர்நீதிமன்ற உத்தரவு இருந்தும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், சிறுபான்மையினர் ஓட்டுக்காக ஹிந்துக்களின் உரிமையை திராவிட மாடல் அரசு பறிக்கிறது என ஹிந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
திருக்கார்த்திகையை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் பெருமாள் கோவில்பட்டி மண்டு கருப்பணசுவாமி கோயிலுக்கு சொந்தமான இடத்தில் தீபம் ஏற்றுவதற்கு ஹிந்துக்கள் தரப்பில் முயற்சி நடந்தது. மதுரை உயர்நீதிமன்ற கிளையில் அனுமதி தீர்ப்பு கிடைத்தும் சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு வாய்ப்புள்ளதாக கூறி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிறுபான்மை ஓட்டுக்காக பெரும்பான்மை ஹிந்து மக்களின் உணர்வை, உரிமையை திராவிட மாடல் அரசு நசுக்குவதாக ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்,
அவர் கூறியதாவது :
பெருமாள் கோவில்பட்டியில் ஹிந்துக்கள் சிறுபான்மையாகவும், கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாகவும் உள்ளனர். இங்குள்ள மண்டு கருப்பண்ண சுவாமி கோயிலுக்கு சொந்தமான இடத்தில் ஒவ்வொரு ஆண்டும் திருக்கார்த்திகை தினத்தில் தீபம் ஏற்ற ஹிந்துக்கள் சார்பில் முயற்சி நடக்கிறது. ஆனால் கிறிஸ்தவர்கள் எதிர்ப்பை காரணம் காட்டி போலீசார் அனுமதி மறுத்து வந்தனர்.
உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஹிந்துக்கள் சார்பில் தீபம் ஏற்றுவதற்கு அனுமதி கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. விசாரித்த நீதிமன்றம் கோயில் இடத்தில் தீபம் ஏற்றுவதால் யாருக்கும் எந்த இடையூறும் இல்லை என்பதால் தீபம் ஏற்ற அனுமதி வழங்கி தீர்ப்பு வழங்கியது. ஆனால் இந்த தீர்ப்பை நடைமுறைப்படுத்தாமல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஹிந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள நாட்டில் அனுதினமும் தங்களது வழிபாட்டு உரிமைகளை பாதுகாக்க போராடுவதும், நீதிமன்றம் சென்று நீதி பெறுவதும், பிறகு அந்த நீதி மறுக்கப்படுவதும் உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் நடைபெறாத கொடுமை. இந்த கொடுமைகளை தமிழகத்தில் ஹிந்துக்கள் ஒவ்வொரு நாளும் அனுபவித்து வருகிறார்கள். ஹிந்துக்கள் சிறுபான்மையானால் தீபம் ஏற்றும் நிகழ்வை கூட நடத்த முடியாது என்பது இதன் மூலம் கண்கூடாக தெரிகிறது.
சிறுபான்மை மக்களின் ஓட்டுக்காக பெரும்பான்மை மக்களின் உணர்வுகளை நசுக்கும் திராவிட மாடல் தி.மு.க., அரசை ஓட்டு என்ற ஆயுதம் கொண்டு ஓட ஓட விரட்ட வேண்டும் என்றார்.
சிறுபான்மையின் ஓட்டு மட்டும் போதுமா... ஹிந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் செந்தில்குமார் கூறியதாவது:
6 மாதத்திற்கு முன்பாக காளியம்மன் கோயில் திருவிழாவிற்கு ஏற்பாடு செய்த போது போலீசார் முன்னிலையிலேயே ஹிந்துக்கள் தாக்கப்பட்டனர்.
இந்நிலையில் மண்டு கருப்பண்ணசுவாமி கோயில் வாசலில் கோயில் இடத்தில் தீபம் ஏற்றுவதற்கு உயர்நீதிமன்ற உத்தரவு இருந்தும் ஹிந்துக்ககளை மிரட்டி தடை செய்துள்ளனர்.
அவசரமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. நேரடியாகவே நீதி மன்றத்திற்கு சவால் விடும் வகையில் தமிழக அரசு இவ்வாறு செயல்படுகிறது. அரசு ஹிந்துக்களுக்கு எதிராக செயல்படுவது இதன் மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இந்த அப்பட்டமான ஹிந்து விரோத நடவடிக்கைகளை ஹிந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.
தங்களது மத வழிபாட்டு உரிமைகளை பாதுகாக்க ஒவ்வொரு பிரச்னைக்கும் நீதிமன்றத்தை நாட வேண்டியுள்ளது. அவ்வாறு நீதிமன்றத்தை நாடி நியாயமான தீர்ப்பை பெற்றாலும் நீதிமன்ற உத்தரவையும் அப்பட்டமாக மீறி ஹிந்துக்களுக்கு நீதி கிடைக்காமல் பார்த்துக் கொள்கின்றனர்.
இதையெல்லாம் பார்க்கும் போது தற்போது தமிழகத்தை ஆளும் திராவிட மாடல் என பிதற்றிக் கொள்ளும் தி.மு.க., அரசு ஹிந்து மதத்தினர் உட்பட அனைவருக்குமான அரசா, இல்லை கிறிஸ்தவ, இஸ்லாமியர்களுக்கு மட்டுமான அரசா என்ற கேள்வி எழுகிறது. ஹிந்துக்களை நசுக்கி அடக்கி ஒடுக்கி எல்லா வகையிலும் எதிராக செயல்படும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு சிறுபான்மையினர் ஓட்டு மட்டும் எங்களுக்கு போதும் என்று அறிவிக்க துணிவு இருக்கிறதா.
உள்ளூர் அமைச்சர் பெரியசாமி, போலீஸ், அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுத்து ஒருதலைப் பட்சமாக செயல்பட வைக்கிறார் என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஹிந்துக்களின் ஓட்டை வாங்கி வெற்றி பெற்ற பிறகு அவர்களை அழித்து, ஒழிக்க கிளம்புவது நியாயம்தானா.
அமைச்சர் மனசாட்சியோடும் மனிதநேயத்தோடும் நடந்து கொள்ள வேண்டும். கிறிஸ்தவ மக்களின் ஓட்டுக்காக ஹிந்துக்களின் உரிமைகளை பறிக்க துணிந்தால் வரும் தேர்தலில் ஓரணியில் திரண்டு உங்களை வீட்டுக்கு அனுப்புவர். இதையும் நினைவில் கொண்டு செயல்பட வேண்டும்.
இனி வரும் காலங்களிலாவது அரசு எதிராக செயல்படுவதை கைவிட்டு நியாயமான மத உணர்வுகளையும் உரிமைகளையும் பாதுகாக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

