இந்தியாவின் விலை உயர்ந்த கார் பதிவெண்: ஹரியானாவில் ரூ.1.17 கோடிக்கு ஏலம்
இந்தியாவின் விலை உயர்ந்த கார் பதிவெண்: ஹரியானாவில் ரூ.1.17 கோடிக்கு ஏலம்
UPDATED : நவ 26, 2025 09:54 PM
ADDED : நவ 26, 2025 09:52 PM

சண்டிகர்: ஹரியானாவில் எச்ஆர் 88 பி 8888(HR8B8888) என்ற கார் பதிவென் 1.17 கோடிக்கு ஏலம் போயுள்ளது. இந்தியாவில் அதிக பணம் கொடுத்த வாங்கப்பட்ட கார் பதிவெண் இதுவாகும்.
ஹரியானாவில் விஐபி அல்லது பேன்சி வாகன பதிவெண்கள் ஏல முறையில் ஒதுக்கப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் வெள்ளி மாலை 5 மணி முதல் திங்கள் காலை 9 மணி வரை , வாகன ஓட்டிகள் தங்கள் விருப்பமான எண்ணுக்கு பதிவு செய்து கொள்ளலாம். ஆன்லைனில் நடக்கும் இந்த ஏலத்தின் முடிவுகள் புதன் மாலை 5 மணிக்கு அறிவிக்கப்படும்.
இந்த வாரம் HR 8 B 8888 என்ற கார் பதிவெண் ஏலத்துக்கு வந்தது. 45 பேர் விண்ணப்பம் செய்து இருந்தனர். ஆரம்ப விலையாக 50 ஆயிரம் ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. நண்பகல் 12 மணியளவில் 88 லட்ச ரூபாயாக இருந்த இந்த பதிவெண்ணின் விலை, மாலை 5 மணிக்கு 1.17 கோடிக்கு ஏலம் போனது. கடந்த வாரம் HR 22 W 2222 என்ற பதிவெண் 37.91 லட்ச ரூபாய்க்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம், கேரளாவை சேர்ந்த கோடீஸ்வரர் வேணு கோபாலகிருஷ்ணன், தனது லம்போர்கினி காருக்காக KL 07 DG 0007 என்ற பதிவெண்ணுக்காக 45.99 லட்ச ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

