ஐ.டி., பெண்ணுக்கு டிஜிட்டல் கைது மிரட்டல்: ரூ.2 கோடி கொடுத்து ஏமாந்த அவலம்
ஐ.டி., பெண்ணுக்கு டிஜிட்டல் கைது மிரட்டல்: ரூ.2 கோடி கொடுத்து ஏமாந்த அவலம்
ADDED : டிச 16, 2025 09:56 PM

பெங்களூரு: 'டிஜிட்டல்' கைது மிரட்டலுக்கு பயந்து தனக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு வீடு, நிலத்தை விற்ற ஐ.டி., பெண் ஊழியர், 2 கோடி ரூபாயை மோசடி கும்பலிடம் தந்து ஏமாந்துள்ளார்.
பெங்களூரு எச்.ஏ.எல்., விக்ஞான் நகரில் வசிப்பவர் பவிதா தாஸ், 57. ஒயிட்பீல்டில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் மென்பொறியாளராக வேலை செய்கிறார்.கடந்த ஆகஸ்ட் மாதம், மொபைல் பவிதாவின் போனுக்கு ஒரு அழைப்பு வந் தது. எதிர்முனையில் பேசிய நபர், தன்னை மும்பை சைபர் கிரைம் போலீஸ் என்று அறி முகம் செய்துள்ளார்.
'உங்கள் பெயருக்கு, வெளிநாட்டில் இருந்து, 'புளு டார்ட்' நிறுவன கூரியரில் பார்சல் வந்துள்ளது. அந்த பார்சலில் போதைப்பொருள் உள்ளது. உங்களை கைது செய்ய உள்ளோம்' என்று கூறினார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், 'அந்த பார்சல் தனக்கு வந்திருக்காது' என, பதிலளித்தார்.எதிர்முனையில் பேசிய நபர், 'உங்களை இந்த வழக்கில் இருந்து காப்பாற்ற வேண் டும் என்றால், நான் கூறும் வங்கிக்கணக்குகளுக்கு பணம் அனுப்ப வேண்டும்; வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது; வீட்டில் வைத்தே உங்களிடம் விசாரிப்பேன்' என்று மிரட்டியுள்ளார்.
இதனால் பயந்து போன பவிதா தாஸ், அவர்கள் கேட்ட பணத்தை ஏற்பாடு செய்வதற்காக, தனக்கு சொந்தமான ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வீடு மற்றும் இரண்டு நிலங்களை விற்று அந்த மோசடி கும்பல் கேட்கும் போதெல்லாம், பல வங்கி கணக்குகளுக்கு, 2 கோடி ரூபாய் வரை அனுப்பி உள்ளார்.
திடீரென அந்த நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை. டிஜிட்டல் கைது என்று மிரட்டி, தன்னிடம் இருந்து 2 கோடி ரூபாய் பறித்ததை பவிதா உணர்ந்தார். ஒயிட்பீல்டு சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனர்.

