ஜின்னாவிடம் ஈவெரா சொன்னது என்ன? அம்பலப்படுத்தினார் மணி சங்கர் அய்யர்
ஜின்னாவிடம் ஈவெரா சொன்னது என்ன? அம்பலப்படுத்தினார் மணி சங்கர் அய்யர்
ADDED : அக் 16, 2025 11:01 AM

புதுடில்லி: ''இந்துஸ்தான், பாகிஸ்தான் மற்றும் திராவிடஸ்தான் என்கிற வகையில், மூன்றாக இந்தியா பிரிக்கப்பட வேண்டும் என ஈவெரா, ஜின்னாவிடம் கூறினார்,'' என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மணி சங்கர் அய்யர் தெரிவித்துள்ளார்.
ஹிமாச்சல பிரதேசத்தின் கவுசாலியில் குஷ்வந்த் சிங் இலக்கிய விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில், மணி சங்கர் அய்யர் பேசியதாவது: தமிழகம் பிற மாநிலங்களை போல அல்லாத ஒரு மாநிலம். அதனால் தான் நானோ,
சிதம்பரமோ திராவிட கட்சிகளின் ஆதரவின்றி வெற்றி பெற முடியவில்லை. 1941ம்
ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி நான் பிறந்த நாளில், பத்திரிகைகளில் என்ன முக்கிய
செய்தி வந்திருந்தது என்பதை பார்த்தேன்.
உலக அளவில் வந்த பிரதான
செய்தியானது, ஹிட்லர் பெல்கிரேடு நகரை ஆக்கிரமித்தார் என்பதாகும். இந்திய அளவில்
முக்கிய செய்தியானது, ஈவெரா சென்னை ரயில் நிலையத்தில் முகமது அலி ஜின்னாவை
நேரில் சென்று வரவேற்றார் என்பது தான். ஏனெனில் முஸ்லிம் லீக்கின் ஆண்டு
பொதுக்குழு கூட்டம் அப்போது சென்னையில் நடந்தது.
அதன் வரவேற்பு குழு தலைவர் என்ற
முறையில் ஈவெரா ஜின்னாவை வரவேற்றார். அந்த மாநாட்டில் பேசிய ஈவெரா, ''நான்
பாகிஸ்தான் கட்டாயம் உருவாக்கப்பட வேண்டும் என்கிற உங்கள் கோரிக்கையை முழுவதுமாக
ஏற்கிறேன். தயவு செய்து என்னுடைய கோரிக்கையையும் ஏற்றுக்கொள்ளுங்கள்.
இந்தியா 3 ஆக பிரிக்கப்பட வேண்டும். இந்துஸ்தான், பாகிஸ்தான் மற்றும்
திராவிடஸ்தான் என்கிற வகையில், 3 ஆக பிரிக்கப்பட வேண்டும் என்றார். இது
தான் இப்போதைய விவகாரத்தின் பின்னணி. இந்த திராவிட சக்திகள் 100
ஆண்டுகளுக்கு முன்னதாகவே, வேறு ஒரு வித்தியாசமான இந்தியாவை உருவாக்க விரும்பினர். இவ்வாறு மணி சங்கர் அய்யர் பேசியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் பற்றி அந்த விழாவின் மற்றொரு நிகழ்வில் மணி சங்கர் பேசியதாவது:
ராஜிவ் தேர்ந்தெடுத்த அரசியல் கொள்கைகளுக்கும், தற்போதுள்ள நிர்வாகத்தின் அரசியல் கொள்கைளுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. தற்போதைய அரசியல் கொள்கைகள், நம் நாட்டின் புவியியல் மற்றும் சமூக எல்லைகளை புறக்கணிக்கின்றன. இலங்கை சிதறுண்டால், இந்தியாவிலும் பாதிப்பு ஏற்படும் என்பதை ராஜிவ் உணர்ந்திருந்தார். இதனால், இலங்கைக்கு இந்திய அமைதிப்படையை அனுப்பி வைக்கும் ஒப்பந்தத்தை அவர் ஏற்படுத்தினார். இலங்கை சிதறிவிடாமல் இருப்பதை தடுக்கவும், தமிழகத்தில் பிரிவினைவாத சக்திகள் தலைதுாக்காமல் இருக்கவும் இந்த நடவடிக்கையை ராஜிவ் எடுத்தார்.
இந்திய அமைதிப் படையை இலங்கைக்கு அனுப்பி வைத்தது, அந்நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த தான்; ஆட்சியை கைப்பற்ற அல்ல. ஆனால், அந்த முடிவு தவறாக மாறியது. முக்கிய தமிழ் தலைவர்கள் மற்றும் போராளி குழுக்களை தவறாக எடை போட்டதால், அனைத்தும் தவறாகி போனது. எது மிக முக்கியம் என ராஜிவ் நினைத்தாரோ, அந்த விஷயமே அவரை அரசியல் ரீதியாக மிகப் பெரிய விலையை கொடுக்க வைத்தது. அதற்கு காரணம் நம் ராணுவமும், உளவுத்துறையும் அவரை கைவிட்டது தான். இவ்வாறு மணி சங்கர் அய்யர் பேசினார்.