உர விற்பனையில் பதுக்கலை தடுக்க டிச., 1ல் புதிய நடைமுறை அமல்
உர விற்பனையில் பதுக்கலை தடுக்க டிச., 1ல் புதிய நடைமுறை அமல்
UPDATED : நவ 21, 2025 04:42 AM
ADDED : நவ 21, 2025 04:39 AM

தேனி: விவசாயிகள் கூடுதலாக உரங்கள் வாங்குவதை தடுக்கவும், கண்காணிக்கும் வகையிலும், உர விற்பனையில் புதிய நடைமுறை, டிசம்பர் 1 முதல் அமலுக்கு வருவதாக வேளாண் துறை அதிகாரிகள் தெரி வித்தனர்.
உர விற்பனையின் போது விவசாயிகளிடம் ஆதார் எண் பெறப்படுகிறது. அதை விற்பனை முனையத்தில் விற்பனையாளர்கள் பதிவு செய்து, உரங்களை விற்கின்றனர்.
மத்திய அரசின் மானியத்தில் விவசாயிகளுக்கு உரங்கள் வழங்கப்படுகின்றன. சில விவசாயிகள் தேவையை விட கூடுதலாக உரங்கள் வாங்கி பதுக்குவது, வேறு சில பயன்பாட்டிற்கு வழங்குவது நடக்கிறது. சிலர் வெவ்வேறு இடங்களில் உரங்கள் கூடுதலாக வாங்குவதை வேளாண் துறையினர் கண்டறிந்துள்ளனர்.
இதை தடுக்க, மாவட்டந்தோறும் கூடுதலாக உரங்கள் வாங்கும் விவசாயிகள், விற்பனை செய்யும் கடைகள் கண்காணிக்கப்படுகின்றன. இந்நிலையில், விவசாயிகள் உர விற்பனையில் புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது.
இதுபற்றி வேளாண் துறை அதிகாரிகள் கூறியதாவது:
விவசாயிகள் ஆதார் எண்ணை விற்பனை முனையத்தில் பதிவு செய்து உரங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. இனி விவசாயிகள் எந்த கடை, கூட்டுறவு சங்கங்களில் உரம் வாங்கினாலும், அவர்கள் ஆதார் எண்ணை பதிவு செய்யும் போது, கடந்த ஒரு மாதத்தில் எவ்வளவு உரங்கள் வாங்கி உள்ளனர் என்ற தகவல் விற்பனையாளருக்கு தெரியும்.
இதனால், கூடுதலாக அந்த விவசாயிக்கு உரம் விற்பனை செய்வது தவிர்க்கப்படும். இதன் மூலம் உர பதுக்கல், தேவையற்ற பயன்பாட்டிற்கு வழங்குதல் தடுக்கப்படும். கூடுதல் மானியம் செலவிடுவது மிச்சமாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

