அல் குவைதா பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்ப்பு; 22 இடங்களில் என்.ஐ.ஏ., சோதனை
அல் குவைதா பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்ப்பு; 22 இடங்களில் என்.ஐ.ஏ., சோதனை
UPDATED : செப் 09, 2025 06:22 AM
ADDED : செப் 09, 2025 03:18 AM

சென்னை : அல் குவைதா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆள் சேர்ப்பு மற்றும் நிதி திரட்டும் பணியில் ஈடுபடுவோரை கைது செய்ய, தமிழகம், கர்நாடகா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட ஐந்து மாநிலங்கள் மற்றும் ஜம்மு - காஷ்மீரில் 22 இடங்களில் நேற்று, என்.ஐ.ஏ., என்ற தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
ஜம்மு - காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் ஊடுருவிய பாக்., பயங்கரவாதிகள், கடந்த ஏப்., 22ல், அப்பாவி சுற்றுலா பயணியர் 26 பேரை கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றனர்.
இக்கொடூர சம்பவம் குறித்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். விசாரணையில், நாட்டின் பல மாநிலங்களில் அல் குவைதா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆள் சேர்ப்பு மற்றும் நிதி திரட்டும் பணிகள் நடப்பதை கண்டறிந்தனர்.
மூளைச்சலவை செய்யப்பட்ட இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிக்கப் படுவதாகவும், அவர்களுக்கு புகார்கள் சென்றன.
அதற்கு ஏற்ப, தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில், பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த பயங்கரவாதி அஹலதுர் முகமது, 22, என்பவர், தமிழக காவல் துறையின் ஏ.டி.எஸ்., எனும் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இவரின் மொபைல் போனில், உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்த விபரங்கள், அவரின் பயண திட்டங்கள் இருந்ததும் தெரிய வந்தது. சம்பாதிக்கும் பணத்தில் 40 சதவீதத்தை ஆயுதம் வாங்க சேமித்து வந்ததும் கண்டறியப்பட்டது.
அவரது கூட்டாளிகளும் தமிழகத்தில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. அஹலதுர் முகமது பதுங்கி இருந்த இடத்தில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். இவர் பற்றி தொடர் விசாரணையும் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பயங்கரவாத சதி செயல்களை முறியடிக்கும் வகையிலும், அல் குவைதா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆள் சேர்ப்பு மற்றும் நிதி திரட்டும் பணிகளில் ஈடுபடுவோரை கைது செய்யவும், பீஹார், உ.பி., தமிழகம், கர்நாடகா, மஹாராஷ்டிரா மற்றும் ஜம்மு - காஷ்மீரில், 22 இடங்களில் தனித்தனி குழுக்களாக சென்று, நேற்று என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
துாத்துக்குடி, தாளமுத்து நகர் அருகே சிலுவைப்பட்டி பகுதியில், தமிழக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திற்கு சொந்தமான கட்டடத்தில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கு தங்கியிருந்த பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த ஷா ஆலம், 18, என்பவரிடம், காலை 6:00 - 10:00 மணி வரை விசாரணை நடத்தினர்.
சமீபத்தில் கைதான ஷாகில் என்பவரின் மொபைல் போன் எண், ஷா ஆலம் என்பவரிடம் இருந்ததால் விசாரணை நடத்தப்பட்டதாக என்.ஐ.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர்.
பின், அவரை தாளமுத்து நகர் காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவருடன் தங்கி இருப்பவர்களிடம், உரிய ஆவணங்கள் இல்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக, தாளமுத்து நகர் போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.