ரூ.1,000 கோடியை தொட்டது 'நம்ம ஸ்கூல்; நம்ம ஊரு' பள்ளி நிதி
ரூ.1,000 கோடியை தொட்டது 'நம்ம ஸ்கூல்; நம்ம ஊரு' பள்ளி நிதி
ADDED : நவ 04, 2025 05:13 AM

சென்னை:  அரசு பள்ளிகளை மேம்படுத்த பெறப்படும் நன்கொடை நிதி தற்போது, 1,000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுகுறித்து, அவர் கூறியுள்ளதாவது:
ஆயிரம் கோடி ரூபாயை தொட்டது, 'நம்ம ஸ்கூல்; நம்ம ஊரு பள்ளி' நிதி. இந்த ஆண்டில் மட்டும்,46,767 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டுடன், நாட்டிலேயே பள்ளிக் கல்வியில் பெரும் கவனம் செலுத்தி வருகிறது, தமிழக அரசு.
அரசின் முயற்சிகளுக்கு பக்கபலமாக, 5 லட்சம் ரூபாயை முதல் நன்கொடையாக வழங்கி, நான் துவக்கி வைத்த, 'நம்ம ஸ்கூல்; நம்ம ஊரு' பள்ளி திட்டத்திற்கு, இதுவரை 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான உதவிகள் பெறப்பட்டுள்ளன.
ஆயிரக்கணக்கிலான, 'ஸ்டெம்' ஆய்வகங்கள், 'ஸ்மார்ட்' வகுப்பறைகள், நவீன கழிப்பறைகள், திறன் பயிற்சிகள் உள்ளிட்ட பணிகளை, அரசு பள்ளிகளில் நிறைவேற்றிஉள்ளோம்.
நம்மை வளர்த்த சமூகத்துக்கும் பள்ளிக்கும் உதவ வேண்டும் எனும், உயர்ந்த உள்ளத்தோடு பங்களித்த, 885 நிறுவனங்களுக்கும், 1,500 நன்கொடையாளர்களுக்கும் நன்றி.
அனைவரின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில், வெளிப்படைத் தன்மையோடும் நேர்மையோடும், நற்பெயரைப் பெற்றுத் தந்துள்ள பள்ளிக் கல்வி துறை அமைச்சர் மகேஷுக்கும், 'நம்ம ஸ்கூல்; நம்ம ஊரு' பள்ளி அறக்கட்டளை தலைவர் வேணு சீனிவாசன் ஆகியோருக்கும் பாராட்டுகள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அறிக்கை:
'நம்ம ஸ்கூல்; நம்ம ஊரு' பள்ளி திட்டத்திற்கு நன்கொடை வசூலிக்க வற்புறுத்தப்படுவதாக கூறும் குற்றச்சாட்டுகளை, பள்ளிக் கல்வித்துறை மறுக்கிறது.
அரசு அலுவலரோ, தலைமை ஆசிரியரோ, ஆசிரியரோ எவ்வித நிதியையும் பெற நியமிக்கப்படவோ, அதிகாரம் அளிக்கப்படவோ இல்லை.
பள்ளி மேலாண்மை குழு வாயிலாக பள்ளியின் தேவைகள், பெற்றோருக்கான மொபைல் போன் செயலியில் பதிவிடப்படுகின்றன.
அதற்கு இதுவரை, 885 நிறுவனங்கள், 1,500க்கும் மேற்பட்ட தனிநபர்களின் சார்பில், 860 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது; 200க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து பங்களிக்கின்றனர்.
மேலும், பள்ளிக் கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு, கடந்த நான்காண்டுகளில், 43.5 சதவீதம் உயர்ந்துள்ளது.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

