sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 05, 2025 ,கார்த்திகை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

உச்சி மாநாட்டில் பங்கேற்க டில்லி வந்தார் புடின்! ஆரத்தழுவி வரவேற்றார் மோடி

/

உச்சி மாநாட்டில் பங்கேற்க டில்லி வந்தார் புடின்! ஆரத்தழுவி வரவேற்றார் மோடி

உச்சி மாநாட்டில் பங்கேற்க டில்லி வந்தார் புடின்! ஆரத்தழுவி வரவேற்றார் மோடி

உச்சி மாநாட்டில் பங்கேற்க டில்லி வந்தார் புடின்! ஆரத்தழுவி வரவேற்றார் மோடி


UPDATED : டிச 05, 2025 01:59 AM

ADDED : டிச 05, 2025 01:45 AM

Google News

UPDATED : டிச 05, 2025 01:59 AM ADDED : டிச 05, 2025 01:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இருநாள் அரசுமுறை பயணமாக நேற்று மாலை டில்லி வந்தடைந்தார். பாலம் விமான நிலையத்தில் தரையிறங்கிய புடினை, பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று ஆரத்தழுவி வரவேற்று, தன் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். முன்னதாக விமான நிலையத்தில், ரஷ்ய அதிபர் புடினுக்கு ஏ.ஆர்.ரகுமானின் இசையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Image 1503842

இந்தியா - ரஷ்யா இடையே கடந்த 80 ஆண்டுகளாக ஆழமான நட்புறவு நீடித்து வருகிறது. நம் நாட்டின் நெருங்கிய நண்பனாக ரஷ்யா விளங்கி வருகிறது. இரு நாட்டுக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்தவும், பல்வேறு ஒப்பந்தங்களை இறுதி செய்யவும், ஆண்டுக்கு ஒருமுறை இந்தியா - ரஷ்யா உச்சி மாநாடு நடக்கிறது.

Image 1503841

டில்லியில், கடந்த 2021ல் நடந்த ஆண்டு உச்சி மாநாட்டில் புடின் பங்கேற்றார். இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூலையில், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்த உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவருக்கு ரஷ்ய அதிபர் புடின் தனிப்பட்ட முறையில் விருந்து அளித்து உபசரித்தார்.

Image 1503840

சிவப்பு கம்பளம்


இதையடுத்து, நடப்பாண்டுக்கான உச்சி மாநாடு, டில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் இன்று நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக பிரத்யேக, 'இல்லுஷின் இல் 96 - 300 பி.யு.,' விமானத்தில் புறப்பட்டு, நேற்று மாலை 6.35 மணிக்கு புடின் டில்லி வந்தடைந்தார்.

பாலம் விமான நிலையத்தில் தரையிறங்கிய புடினை, பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று ஆரத்தழுவி வரவேற்றார். அப்போது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசையுடன் சிவப்பு கம்பளம் விரித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, தனக்கு மாஸ்கோவில் தனிப்பட்ட விருந்து அளித்து உபசரித்தது போல், புடினுக்காக தனிப்பட்ட விருந்துக்கு பிரதமர் மோடி ஏற்பாடு செய்திருந்தார். இதற்காக அவரை விமான நிலையத்தில் இருந்து நேரடியாக தன் இல்லத்திற்கு பிரதமர் அழைத்துச் சென்றார்.

அதன்பின், சிறிது நேரம் இரு நாட்டு தலைவர்களும் உரையாடி, தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஹோட்டலுக்கு இரவு 8.30 மணிக்கு, புடின் புறப்பட்டுச் சென்றார்.

அதிபர் புடினின் அதிகாரபூர்வ இந்திய சுற்றுப்பயணம், இன்று காலை ஜனாதிபதி மாளிகையில் இருந்து துவங்குகிறது. ரஷ்ய அதிபரை வரவேற்பதற்காக ஜனாதிபதி மாளிகையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

முக்கிய ஒப்பந்தங்கள்


சிவப்பு கம்பள வரவேற்புடன் முழு ராணுவ அணிவகுப்பு மரியாதை அவருக்கு அளிக்கப்படஉள்ளது.

அதன்பின் அங்கிருந்து டில்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி சமாதிக்கு செல்லும் புடின், மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார். அங்கு அரை மணி நேரம் வரை அவர் செலவிடுவார் என கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து ஹைதராபாத் இல்லத்தில் துவங்கும் உச்சி மாநாட்டில் புடின் பங்கேற்கிறார்.

இந்த மாநாட்டிற்கு பின், பிரதமர் மோடி அவருக்கு ஹைதராபாத் இல்லத்திலேயே மதிய விருந்து அளிக்கிறார். அதன்பின், இரு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் சந்தித்து பல்வேறு ஒப்பந்தங்கள் குறித்து பேச்சு நடத்துகின்றனர்.

குறிப்பாக ராணுவ ஒத்துழைப்பு, எரிசக்தி, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யாவிடம் இருந்து ஆண்டுக்கு, 5.84 லட்சம் கோடி ரூபாய்க்கு இந்தியா பொருட்களை இறக்குமதி செய்து வருகிறது. அதேபோல் இந்தியாவில் இருந்து ரஷ்யாவுக்கு ஆண்டுக்கு, 45,000 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. எனவே, ரஷ்யாவுக்கான ஏற்றுமதியை அதிகரிப்பது குறித்து இந்த பேச்சு நடத்தப்படும் என தெரிகிறது.

மேலும், ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் உரங்களை இறக்குமதி செய்ய நம் நாடு மும்முரம் காட்டி வருகிறது. தற்போதைய நிலவரப்படி, ஆண்டுக்கு 30 முதல் 40 லட்சம் டன் அளவுக்கு ரஷ்யா நமக்கு உரங்களை சப்ளை செய்து வருகிறது.

ரஷ்ய அதிபர் புடின் - பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் உச்சி மாநாட்டில், ஐரோப்பிய பொருளாதார யூனியனுடன் செய்து கொண்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது. மேலும், ரஷ்யாவிடம் இருந்து, 'எஸ் - 400' ரக வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பை கூடுதலாக கொள்முதல் செய்வது குறித்த பேச்சுகளும் நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ஜனாதிபதி விருந்து


ஆண்டு உச்சி மாநாடு நிறைவடைந்த பின், ஜனாதிபதி திரவுபதி முர்மு அளிக்கும் விருந்திலும் ரஷ்ய அதிபர் புடின் கலந்து கொள்கிறார். அதன்பின், இன்று இரவு 9:00 மணிக்கு புறப்பட்டு மீண்டும் மாஸ்கோ செல்கிறார்.

இந்தியா - அமெரிக்கா இடையிலான நட்புறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், அதிபர் புடினின் வருகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

குறிப்பாக ராணுவ ரீதியில் இரு நாட்டுக்கும் இடையே வலுவான நட்புறவு ஏற்படும் என்பதால், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் இதை உன்னிப்பாக கவனித்து வருகின்றன.

மரபை மீறும் மத்திய அரசு; ராகுல் புகார்


லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.,யுமான ராகுல் கூறியதாவது: நம் நாட்டிற்கு வரும் வெளிநாட்டு தலைவர்களை, எதிர்க்கட்சி தலைவர்கள் சந்தித்து பேசுவது ஆண்டாண்டு காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் மரபாக உள்ளது. முன்னாள் பிரதமர்கள் வாஜ்பாய், மன்மோகன் சிங் காலத்திலும் இது கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால், தற்போது வரும் வெளிநாட்டு தலைவர்களிடம், எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்க வேண்டாம் என, மத்திய அரசு அறிவுறுத்துகிறது.
நான் வெளிநாடு செல்லும் போது, இதுகுறித்து அவர்கள் என்னிடம் கூறுகின்றனர். நம் நாட்டை அரசு மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை; நாங்களும் தான். இந்தியா வரும் வெளிநாட்டு தலைவர்களை பிரதமரும், வெளியுறவு அமைச்சகமும் எதிர்க்கட்சிகளிடம் இருந்து விலக்கியே வைத்துள்ளது. இதற்கு அவர்களின் அச்சமே காரணம். இவ்வாறு அவர் கூறினார்.



Image 1503839

'மத்திய அரசு அழுத்தம் தர வேண்டும்'

பீஹாரின் பாட்னாவைச் சேர்ந்த அபய் சிங், உக்ரைன் எல்லையை ஒட்டியுள்ள ரஷ்யாவின் குர்ஸ்க் நகரின் எம்.பி.,யாக உள்ளார். அதிபர் புடினின் இந்திய வருகை குறித்து அவர் கூறியதாவது: புடினின் வருகை இந்தியாவில் மட்டுமல்ல, ரஷ்யாவிலும் புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு பின், அவர் இந்தியா வருவது இரு நாடுகளுக்கு இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும்.
தற்போது, இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வரும் எஸ் - 400 வான் பாதுகாப்பு அமைப்பு, மிகச்சிறந்த ஏவுகணை அமைப்பு. ஆனால், சமீபத்திய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள எஸ் - 500 அமைப்பை ரஷ்யா பயன்படுத்தி வருகிறது. இதை, வேறு எந்த நாட்டிற்கும் ரஷ்யா வழங்கவில்லை. இதை இந்தியாவுக்கு வழங்க முடிவு செய்தால், அதை பெறும் முதல் நாடாக இந்தியா மாறும். எனவே, எஸ் - 500 அமைப்பை ரஷ்யாவிடம் இருந்து பெற, புடினிடம் மத்திய அரசு அழுத்தம் தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.



Image 1503838

அதிபர் புடினின் 'ஆரஸ் செனட்' கார்

புடினின் வருகைக்கு முன், அவர் பயன்படுத்தும், 'ஆரஸ் செனட்' கார், தனி விமானம் வாயிலாக இந்தியா கொண்டுவரப்பட்டது. 'நகரும் அரண்மனை' என வர்ணிக்கப்படும் இந்த காரில், உயர்மட்ட பாதுகாப்பு அம்சங்கள் உட்பட பல்வேறு வசதிகள் உள்ளன. இது அந்நாட்டு அதிபர் மற்றும் அரசு பயன்பாட்டுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. ரஷ்ய நாட்டு பாதுகாப்பு படையைச் சேர்ந்த இந்த காரில், எந்த வகையைச் சேர்ந்த துப்பாக்கி குண்டுகளும் துளைக்காத வகையில் வடிவமைக்கப்பட்டுஉள்ளது.
வெடிகுண்டு தாக்குதல் உட்பட எந்தவித தாக்குதலில் இருந்தும் பாதுகாக்கும் தன்மையை கொண்டது. தண்ணீரில் விழுந்தாலும், பாதுகாப்பான தரைப்பகுதிக்கு செல்லும் வரை மிதக்கும் தன்மை உடையது ஆரஸ் செனட். காரின் அனைத்து டயர்களும் அழிக்கப்பட்டாலும், நீண்ட துாரத்துக்கு அதிவேகமாக இயக்க முடியும். நச்சு வாயுக்களை வெளியேற்ற காரில் பிரத்யேகமாக காற்று வடிகட்டுதல் அமைப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மணிக்கு, 160 கி.மீ., வரை செல்லும் ஆரஸ் செனட் காரின் மதிப்பு, 5 கோடி ரூபாய்.








      Dinamalar
      Follow us