இந்தியாவில் முதலீடு செய்ய சரியான நேரம்: பிரதமர் மோடி
இந்தியாவில் முதலீடு செய்ய சரியான நேரம்: பிரதமர் மோடி
ADDED : டிச 18, 2025 10:35 PM

புதுடில்லி: அணுசக்தி துறையில் தனியாரை அனுமதிக்கும் மசோதா பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள பிரதமர் மோடி, '' இந்தியாவில் முதலீடு செய்வதற்கும், புதுமைகளைப் படைப்பதற்கும், கட்டமைப்பதற்கும் இதுவே மிகச் சரியான நேரம்,'' எனத் தெரிவித்துள்ளார்.
அணுசக்தி துறை மத்திய அரசின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தத் துறையில் தனியாருக்கும் அனுமதி வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக தயாரிக்கப்பட்ட ' இந்தியாவின் மாற்றத்துக்கான அணுசக்திமேம்பாட்டு மசோதா(Shanti) லோக்சபாவில் நேற்று விவாதத்துக்கு பிறகு நிறைவேற்றப்பட்டது. ராஜ்யசபாவில் இந்த மசோதா இன்று (டிச.,19) நிறைவேறியது.
இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பார்லிமென்டின் இரு அவைகளிலும் அணுசக்தி மசோதா நிறைவேற்றப்பட்டு இருப்பது நமது தொழில்நுட்பத்துறைக்கு ஒரு மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் தருணம் ஆகும். இந்த மசோதா நிறைவேற ஆதரவு அளித்த எம்பிக்களுக்கு எனது நன்றிகள். செயற்கை நுண்ணறிவுக்கு பாதுகாப்பான ஆற்றல் அளிப்பது முதல்பசுமை உற்பத்திக்கு வழிவகுப்பது வரை, இது நாட்டிற்கும், உலகிற்கும், ஒரு தூய்மையான எரிசக்தி உந்துதலை அளிக்கிறது. இது தனியார் துறைக்கும், நமது இளைஞர்களுக்கும் ஏராளமான வாய்ப்புகளை திறந்து விடுகிறது. இந்தியாவில் முதலீடு செய்வதற்கும், புதுமைகளைப் படைப்பதற்கும், கட்டமைப்பதற்கும் இதுவே மிகச் சரியான நேரம்!. இவ்வாறு அவர் கூறினார்.

