வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி: தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி: தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
ADDED : நவ 11, 2025 04:41 PM

புதுடில்லி: தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் நடக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் 26ம் தேதிக்குள் பதிலளிக்க தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி, நவ., 4 முதல் ஒரு மாதம் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கு, தி.மு.க., காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதிமுக மற்றும் பாஜ உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அரசியல் கட்சிகள் கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்வது என முடிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 3ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் திமுகவின் அமைப்புச் செயலாளர் வழக்கு தொடர்ந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மேற்கு வங்க மாநில காங்கிரஸ் மற்றும் திரிணமுல் காங்கிரஸ் கட்சிகள் சார்பிலும் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் ஜாய்மால்யா பக்ஷி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதாடுகையில், '' தமிழகத்தில் மழைக்காலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியை மேற்கொள்ள இயலாது. வருவாய் அதிகாரிகள் பருவமழை , வெள்ளம் மற்றும் மீட்புப்பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள். மழை, பண்டிகைகாலம் என்பதால் மக்கள் பங்கேற்க இயலாது. பல கிராமங்களில் இணையதள சேவை இல்லாத சூழலில் இந்தப் பணியில் மக்கள் பங்கேற்பதில் சிரமம் ஏற்படும்'', என்றார்.
திமுக தரப்பில்,'' அவசர கதியில் இந்தப் பணியை தேர்தல் கமிஷன் மேற்கொள்கிறது. பீஹாரில் நடத்தியதைல் போல் தமிழகத்தில் எப்படி நடத்த முடியும். இரண்டிலும் வெவ்வேறு சூழல். அவசர கதியாக செய்யப்படும் இந்தப் பணியால் ஒவ்வொருவரின் ஜனநாயக உரிமை பறிக்கப்படுகிறது,'' என வாதிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம், ' இந்த விவகாரம் குறித்து தேர்தல் கமிஷன் பதிலளிக்க வேண்டும். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடர்பாக ஐகோர்ட்கள் விசாரணை நடத்தக்கூடாது. அனைத்து மனுக்களின் நகல்களை தேர்தல் கமிஷன் வழக்கறிஞருக்கு வழங்க வேண்டும்' என உத்தரவிட்டு விசாரணையை நவ.,26க்கு ஒத்திவைத்தனர்.
இந்த வழக்கு விசாரணையின் போது, அதிமுக சார்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என அக்கட்சி சார்பில் கோரிக்கைவைக்கப்பட்டது. இதனையடுத்து நீதிமன்றம், '' நீங்கள் விரும்பும் மாடலில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடக்க வேண்டுமா'' எனக்கேள்வி எழுப்பியதுடன், தனியாக மனு தாக்கல் செய்தால் மட்டுமே விசாரணை நடத்துவோம் என தெரிவித்தனர்.

