டில்லி அரசுக்கு எதிரான போராட்டத்தில் மாவோ., தலைவருக்கு ஆதரவாக முழக்கம்; போலீசார் மீது பெப்பர் ஸ்பிரே அடித்ததால் பதற்றம்
டில்லி அரசுக்கு எதிரான போராட்டத்தில் மாவோ., தலைவருக்கு ஆதரவாக முழக்கம்; போலீசார் மீது பெப்பர் ஸ்பிரே அடித்ததால் பதற்றம்
ADDED : நவ 25, 2025 05:10 AM

புதுடில்லி: டில்லியில் மோசமடைந்த காற்று மாசை தடுக்க தவறிய அரசை கண்டித்து நடந்த போராட்டத்தில், மாவோயிஸ்ட் ஆதரவு போஸ்டர்கள் இடம் பெற்றதால் பதற்றம் ஏற்பட்டது.
போராட்டக்காரர்களை கலைக்க வந்த போலீசார் மீது, 'பெப்பர் ஸ்பிரே' எனப்படும் மிளகுத்துாள் தெளிக்கப்பட்டதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தலைநகர் டில்லியில் காற்று மாசு நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. இதை, முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான பா.ஜ., அரசு கட்டுப்படுத்த தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
ஆம் ஆத்மி, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து, பா.ஜ., அரசை கண்டித்து இந்தியா கேட் நோக்கி கடந்த 8ம் தேதி கண்டன பேரணி நடத்தின. அப்போது காற்று மாசு கட்டுப்படுத்த ஆக்கப்பூர்வமான கொள்கைகளை அரசு வகுக்க வேண்டும் என வலியுறுத்தின.
இந்நிலையில், காற்று மாசு கட்டுப்படுத்தக் கோரியும், போதிய நடவடிக்கைகள் எடுக்காத பா.ஜ., அரசை கண்டித்தும், இரண்டாவது முறையாக நேற்று முன்தினம் இந்தியா கேட் பகுதியில் போராட்டம் நடந்தது.
டில்லி ஒருங்கிணைப்பு குழு ஏற்பாடு செய்த இந்த போராட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர்.
அப்போது, சமீபத்திய என்கவுன்டரில் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் தலைவர் மத்வி ஹித்மாவின் போஸ்டர்களை துாக்கி பிடித்து போராட்டக்காரர்கள் சிலர் முழக்கங்கள் எழுப்பினர். இதனால், காற்று மாசு போராட்டத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இந்தியா கேட் பகுதியில் பிரதான சாலையை வழிமறித்த போராட்டக்காரர்கள், போக்குவரத்திற்கும் பெரும் இடையூறு ஏற்படுத்தினர். தகவல் அறிந்து அங்கு விரைந்த போலீசார், போராட்டக்காரர்களை கலைக்க முயன்றனர்.
அப்போது கூட்டத்தில் இருந்த சிலர், திடீரென 'பெப்பர் ஸ்பிரே'வை போலீசாரின் முகத்தில் அடித்து தாக்கினர். இதனால் அமைதி போராட்டம் வன்முறையாக மாறியது.
இதைத் தொடர்ந்து அனுமதியின்றி இந்தியா கேட் பகுதியில் கூடியதற்காகவும், போலீசார் மீது 'பெப்பர் ஸ்பிரே' அடித்து தாக்குதல் நடத்தியதற்காகவும் வழக்கு பதிந்து, 23 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து மூன்று 'பெப்பர் ஸ்பிரே' கேன்களையும் பறிமுதல் செய்தனர்.
காற்று மாசு தடுக்கக்கோரி நடந்த போராட்டத்தில், மாவோயிஸ்ட் ஆதரவு போஸ்டர்கள் எப்படி முளைத்தன என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 17 பேருக்கு, மூன்று நாள் நீதிமன்ற காவல் வழங்கி டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

