கரூர் நெரிசல் சம்பவ வழக்கு; ஐகோர்ட் பதிவாளர் அறிக்கை தர சுப்ரீம் கோர்ட் ஆணை
கரூர் நெரிசல் சம்பவ வழக்கு; ஐகோர்ட் பதிவாளர் அறிக்கை தர சுப்ரீம் கோர்ட் ஆணை
ADDED : டிச 12, 2025 01:59 PM

நமது டில்லி நிருபர்
கரூர் நெரிசல் சம்பவ வழக்கில் சென்னை ஐகோர்ட் விசாரணையில் தவறுகள் உள்ளதாக கருதுகிறோம். இது பற்றி ஐகோர்ட் பதிவாளர் அறிக்கை தர வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கரூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நடத்திய கூட்டத்தில், நெரிசல் ஏற்பட்டு, 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை தமிழக போலீசார் விசாரித்து வந்த நிலையில், மாநில அரசு சார்பில் சிறப்பு புலனாய்வு குழுவும் அமைக்கப்பட்டது. வழக்கை சிபிஐக்கு மாற்ற வலியுறுத்தி சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. சுப்ரீம்கோர்ட், விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது.
இன்று (டிச.,12) கரூர் நெரிசல் வழக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கே.கே.மகேஸ்வரி மற்றும் விஜய் பிஷ்னோய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், ''தனி நீதிபதி ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்.
எதிர்காலத்தில் கூட்டங்களை நடத்துவதற்கான வழிமுறைகளை வகுக்கவே ஆணையம் அமைக்கப்பட்டது'' என வாதங்களை முன்வைத்தார்.
வாதங்களை கேட்ட சுப்ரீம் கோர்ட் நீதிபதி மகேஸ்வரி, ''சென்னை ஐகோர்ட் விசாரணையில் தவறு உள்ளதாக கருதுகிறோம். ஐகோர்ட் பதிவாளர் அறிக்கை தர வேண்டும்,'' என உத்தரவிட்டார். பின்னர் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

