இன்ஜினில் கோளாறு; கோல்கட்டாவில் ஸ்பைஸ்ஜெட் விமானம் அவசர தரையிறக்கம்
இன்ஜினில் கோளாறு; கோல்கட்டாவில் ஸ்பைஸ்ஜெட் விமானம் அவசர தரையிறக்கம்
ADDED : நவ 10, 2025 11:45 AM

கோல்கட்டா: இன்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மும்பையில் இருந்து புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம், கோல்கட்டாவில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
மும்பை விமான நிலையத்தில் இருந்து 188 பேருடன் மும்பையில் இருந்து நேற்று மாலை 7.10 மணிக்கு ஸ்பைஸ்ஜெட் விமானம் புறப்பட இருந்தது. ஆனால், சில காரணங்களுக்காக விமானம் 2 மணிநேரம் தாமதமாக புறப்பட்டது. விமானம் வானத்தில் பறந்து கொண்டிருந்த போது, அதன் இன்ஜினில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.
இதனை உணர்ந்த விமானி, விமானக் கட்டுப்பாட்டு மையத்தின் உதவியுடன், கோல்கட்டா விமான நிலையத்தில் அவசர கால தரையிறக்கத்திற்கான எச்சரிக்கை விடுத்தார். இதையடுத்து, விமான நிலைய அதிகாரிகளும், விமானத்தை பத்திரமாக தரையிறக்குவதற்காக உஷார் நிலையில் இருந்தனர். அதன்படி, இரவு 11.38 மணியளவில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. அனைத்து பயணிகள் மற்றும் விமானிகளும் பாதுகாப்பாக இருப்பதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

