தீவிரமாகும் தாய்லாந்து-கம்போடியா மோதல்: ஆயிரக்கணக்கான மக்கள் கடும் பாதிப்பு
தீவிரமாகும் தாய்லாந்து-கம்போடியா மோதல்: ஆயிரக்கணக்கான மக்கள் கடும் பாதிப்பு
ADDED : டிச 10, 2025 01:05 PM

சுரின்: தாய்லாந்து- கம்போடியா மோதல் தீவிரம் அடைந்து வரும் நிலையில், ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர்.
தென் கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து - கம்போடியா இடையே நுாறாண்டுகளுக்கும் மேலாக எல்லை பிரச்னை நீடித்து வருகிறது. நீண்ட காலமாக நீடித்த இந்த எல்லை பிரச்னை, ஜூலையில் மோதலாக வெடித்தது. ஐந்து நாட்கள் நீடித்த மோதலில், ராணுவ வீரர்கள், பொதுமக்கள் என 43 பேர் கொல்லப்பட்டனர். அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் மலேஷிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் முயற்சியால் இரு நாடுகளுக்கிடையே கடந்த அக்டோபரில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
துப்பாக்கிச்சண்டை
இருப்பினும், எல்லையில் பதற்றம் தொடர்ந்து நீடித்து வந்தது. சமீபத்தில், தாய்லாந்து வீரர்கள் கண்ணி வெடியில் சிக்கி காயமடைந்ததை அடுத்து, அமைதி ஒப்பந்தத்தில் விரிசல் ஏற்பட்டது. அதிருப்தி அடைந்த தாய்லாந்து, அமைதி ஒப்பந்தத்தை காலவரையின்றி நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. தாய்லாந்து - கம்போடியா எல்லையில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் தாய்லாந்து வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்; எட்டு வீரர்கள் காயமடைந்தனர்.
பதற்றம்
கம்போடியாவுக்கு பதிலடி கொடுக்க, அந்நாட்டின் ராணுவ இலக்குகளை குறிவைத்து வான்வழி தாக்குதலை தாய்லாந்து நடத்தியது. இதனால் இரு நாடு களுக்கு இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. எல்லையில் மோதல் நடக்கும் பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர். ஏற்கனவே மோதல்கள் காரணமாக, எல்லை பகுதியில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேறியுள்ளனர்.
மக்கள் பாதிப்பு
மோதல் 4வது நாளை எட்டியுள்ள நிலையில், 1,80,000 தாய்லாந்து நாட்டினர் எல்லையில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர். கம்போடியாவைச் சேர்ந்த 60,000 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். தாய்லாந்தும், கம்போடியாவும் பின்வாங்கப் போவதில்லை என்று உறுதியளித்துள்ளன. இதனால் பதற்றமான சூழல் நிலவுகிறது.

