ADDED : ஆக 02, 2026 04:06 AM

புதுடில்லி: திரிணமுல் காங்., கட்சி இரண்டாக உடைந்து, இருக்கும் இடமே தெரியாமல் போய் விட்டார் மம்தா பானர்ஜி. கட்சிக்குள் பிளவு உண்டாக காரணம், அவரது சகோதரர் மகன் அபிஷேக் பானர்ஜி. இதை பார்த்து பாடம் கற்றுக் கொண்டார், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி. தன் தம்பி மகனான ஆகாஷ் ஆனந்தை தான், தன் அரசியல் வாரிசாக அறிவித்திருந்தார் மாயாவதி.
முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமை யில் பா.ஜ., ஆட்சி நடக்கும் உ.பி.,யில், அடுத்தாண்டு பிப்ரவரியில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதில், மாயாவதி கட்சியின் வேட்பாளர்களை, 'ஆகாஷ் தான் முடிவு செய்வார்' என, ஒரு செய்தி பரவி விட்டது. இதனால், கட்சி தலைவர்கள் பலரும் மாயாவதியை கண்டு கொள்ளாமல், ஆகாஷிடம் சென்றனர்.
இதை பார்த்த மாயாவதி, மம்தாவிற்கு ஏற்பட்ட நிலை தனக்கும் வரக்கூடாது என முடிவு செய்து, 'உ.பி., சட்டசபை வேட்பாளர்களை நான் முடிவு செய்வேன். ஆகாஷ் வெறும் ஒருங்கிணைப்பாளர் மட்டுமே' என அறிவித்தார். அது மட்டுமல்லாமல், 'பொதுக்கூட்டங்களில் பேசுவது, கூட்டங்களை ஒருங்கிணைப்பது மட்டுமே ஆகாஷின் வேலை' என்றும் கறாராக சொல்லி விட்டார்.
கடந்த 2022ல் நடந்த உ.பி., சட்டசபை தேர்தலில், ஒரே தொகுதியில் மட்டுமே வென்ற பகுஜன் சமாஜ், பல தொகுதிகளில் மூன்றாம் இடத்தை பெற்றது. 'இந்த முறை அதிக இடங்களை கைப்பற்ற வேண்டும்' என, தொண்டர்களுக்கு கட்டளையிட்டுள்ள மாயாவதி, இந்த மாதத்திலேயே வேட்பாளர்களை அறிவிக்க இருக்கிறார். மாயாவதி தனித்து போட்டியிட்டால், பா.ஜ.,விற்கு லாபம். எனவே, இதை தடுத்து காங்., கூட்டணியில் மாயாவதியை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் ராகுல்.
