பாஜ பார்வையில் இருந்து ஆர்எஸ்எஸ் இயக்கத்தை புரிந்து கொள்ள முயற்சிப்பது தவறு: மோகன் பகவத்
பாஜ பார்வையில் இருந்து ஆர்எஸ்எஸ் இயக்கத்தை புரிந்து கொள்ள முயற்சிப்பது தவறு: மோகன் பகவத்
ADDED : டிச 21, 2025 04:20 PM

கோல்கட்டா: பாஜ பார்வையில் இருந்து ஆர்எஸ்எஸ் இயக்கத்தை புரிந்து கொள்ள முயற்சிப்பது மிக பெரிய தவறாகும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறி உள்ளார்.
கோல்கட்டாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொண்டு பேசுகையில் கூறியதாவது;
ஆர்எஸ்எஸ் போல் வேறு எந்த இயக்கமும் இல்லை. ஒப்பீடுகள் மூலம் ஆர்எஸ்எஸ்சை புரிந்து கொள்வது மிக பெரிய தவறாகும். ஆர்எஸ்எஸ்சை புரிந்து கொள்ள, அதில் நேரடியாக ஈடுபடுவது அவசியம். ஏன் என்றால் வெளியில் இருந்து பார்க்கும் போது அதை புரிந்து கொள்ள முடியாது. காரணம் எல்லோரும் அதை தங்கள் சொந்த கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர்.
சங்கங்களின் தன்னார்வலர்கள் பல்வேறு துறைகளில் உள்ளனர். சிலர் அரசியலில் உள்ளனர், சிலர் அதிகாரமிக்க பதவிகளை வகிக்கின்றனர். எனவே பாஜ கண்ணாடியின் மூலம் ஆர்எஸ்எஸ்சை புரிந்து கொள்ள முயற்சிக்கிறார்கள். இது மிக பெரிய தவறு.
மக்கள் ஆர்எஸ்எஸ் இயக்கத்தை அறிந்து இருக்கின்றனர். ஆனால் அதன் பணிகளை பற்றி அறிந்திருக்கவில்லை. இந்த இயக்கம் ஏன், எதற்காக நிறுவப்பட்டது? அதற்கான பதிலை ஒரே வாக்கியத்தில் சுருக்கமாக கூறலாம்.
இந்தியா என்பது வெறும் புவியியல் பகுதி அல்ல. அது ஒரு நாகரிகம், கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தின் பெயராகும். அப்படிப்பட்ட ஒரு தேசத்தின் சமூகத்தை பாதுகாப்பது ஆர்எஸ்எஸ் பணியாகும். எந்த அரசியல் நோக்கத்துடனும் இது நிறுவப்பட்டது அல்ல. யாருக்கும் போட்டியாக இயங்கவில்லை. எந்த சூழ்நிலைக்கும் எதிர்வினையாக செயல்பட்டது இல்லை. யாருக்கும் எதிரானது அல்ல. ஆர்எஸ்எஸ் இந்து சமூகத்தின் அமைப்பு, மேம்பாடு மற்றும் பாதுகாப்பிற்காக செயல்படுகிறது.
1857ம் ஆண்டு ஆங்கிலேயர்களுக்கு எதிரான நாடு தழுவிய போராட்டம் நடந்தது. இருப்பினும் அந்த போரில் நாங்கள் தோற்றோம். இந்த தோல்வியின் பலனாக, அக்காலத்தின் சம தலைவர்கள் சிந்திக்க தொடங்கினர். நாம் ஒருமுறை தோற்கடிக்கப்பட்டு இருந்தாலும். மீண்டும் ஆயுதம் ஏந்தி, எதிர்ப்பை தெரிவித்து, ஆங்கிலேயர்களை விரட்டியடிக்க வேண்டும்.
ஹிந்துக்கள் எப்போதுமே இந்த நாட்டிற்கு பொறுப்பானவர்களாகவே கருதப்படுகிறார்கள். நாட்டில் என்ன நடந்தாலும், நல்லது-கெட்டது எது நடந்தாலும் தங்களை ஹிந்துக்கள் என்று கருதாதவர்கள் அரிதாகவே கேள்வி கேட்கப்படுகிறார்கள்.
ஆனால், தங்களை ஹிந்துக்கள் என்று பெருமையுடன் சொல்லிக் கொள்பவர்களிடம் நாட்டுக்காக என்ன செய்துவிட்டீர்கள் என்று எப்போதும் கேட்கிறார்கள். ஏன் எனில் இது பாரம்பரியமாக ஹிந்துக்களின் நிலம்.
இவ்வாறு மோகன் பகவத் பேசினார்.

