இந்தியா- இஸ்ரேல் வர்த்தக ஒப்பந்த பேச்சு; அமைச்சர் பியூஷ் கோயல் மகிழ்ச்சி
இந்தியா- இஸ்ரேல் வர்த்தக ஒப்பந்த பேச்சு; அமைச்சர் பியூஷ் கோயல் மகிழ்ச்சி
ADDED : நவ 23, 2025 08:07 AM

ஜெருசலேம்: இஸ்ரேல் பயணம் மிகவும் வெற்றிகரமானது என மத்திய வர்த்தக் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். அவர், ''இஸ்ரேலில் உள்ள தொழில்துறைத் தலைவர்களும், அரச பிரதிநிதிகளும் இந்தியாவுடனான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் மிகுந்த உற்சாகத்தை வெளிப்படுத்தினர்'' என தெரிவித்தார்.
மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இஸ்ரேலுக்கு பியூஷ் கோயல் சென்றார். அவர், டெல் அவிவ் நகரில் இந்திய-இஸ்ரேல் வர்த்தகர்கள் மாநாட்டில் பங்கேற்றார். இஸ்ரேல் தரப்பில் அந்நாட்டின் பொருளாதார தொழில் துறை அமைச்சர் நிர் பர்கத் தலைமையிலான குழு பங்கேற்றது. பின்னர், இருதரப்பு தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையை முறைப்படி தொடங்குவதற்கான வரையறைகளை நிர்ணயித்து கையொப்பமிட்டனர்.
இது குறித்து பியூஷ் கோயல் கூறியதாவது: இஸ்ரேலின் பொருளாதாரம் மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர் பர்கத்துடன் நான் மிக நீண்ட உரையாடலை நடத்தினேன். பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதற்கு மேலும் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை நாங்கள் மிக விரிவாக விவாதித்தோம். இரு தரப்பினரும் இதைப் பற்றி விவாதித்தனர்.
இப்போது இந்தியக் குழு இஸ்ரேலுக்கு வருகை தந்ததில் அவர் மிகுந்த திருப்தியை வெளிப்படுத்தினார். இஸ்ரேலுக்கான மூன்று நாள் விஜயம் மிகவும் வெற்றிகரமானது. இந்தியாவுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்த அந்நாட்டு அரசு மற்றும் தொழில்துறையிலும், மிகுந்த உற்சாகம் உள்ளது.
நாங்கள் வர்த்தக பேச்சுவார்த்தைக்கான விதிமுறைகளை இறுதி செய்து கையெழுத்திட்டோம். இது இப்போது ஒரு சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கும்.
பல தொழில்நுட்ப நிறுவனங்களுடன் நான் தனித்தனியாக விவாதித்தேன். பாதுகாப்பு, சுகாதாரம் அல்லது மின்னணு தொழில்நுட்பத் துறையாக இருந்தாலும், பல்வேறு துறைகளில் உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசித்தோம். இவ்வாறு பியூஷ் கோயல் தெரிவித்தார்.

