முதலீடுகளை ஈர்ப்பதில் ஆந்திரா -- கர்நாடகா இடையே வார்த்தை போர்! : காங்., கோட்டை விட்டதாக சீண்டும் தெலுங்கு தேசம்
முதலீடுகளை ஈர்ப்பதில் ஆந்திரா -- கர்நாடகா இடையே வார்த்தை போர்! : காங்., கோட்டை விட்டதாக சீண்டும் தெலுங்கு தேசம்
ADDED : அக் 17, 2025 12:46 AM

விசாகப்பட்டினம்: கர்நாடகா மற்றும் ஆந்திர அரசுகளுக்கு இடையே தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக கடந்த சில வாரங்களாக காரசார விவாதங்கள் நடந்து வருகின்றன. 'பலவீனமான பொருளாதார சூழலை மறைக்க ஆந்திரா முயற்சிப்பதாக கர்நாடக அரசு கூறிய நிலையில், 'ஆந்திர உணவு மட்டும் காரமில்லை. நாம் பெற்ற முதலீடுகளும் அத்தகையது தான். இதனால், அண்டை மாநிலத்தவர்கள் சிலர் எரிச்சலை உணருகின்றனர்' என, ஆந்திர அரசு பதிலடி கொடுத்துள்ளது.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, சரக்கு போக்குவரத்தை கையாளும் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ராஜேஷ் யபாஜி என்பவர், பெங்களூரு போக்குவரத்து நெரிசல் குறித்து கடுமையான விமர்சனங்களை சமீபத்தில் முன்வைத்தார்.
பெங்களூரை விட்டு விரைவில் வெளியேறப்போவதாகவும் கூறினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும், பெங்களூரு சாலைகள் மிக மோசமாக பராமரிக்கப்படுவதையும், குண்டும் குழியுமான சாலையால் விபத்துகள் அதிகரித்து வருவதையும் பொதுமக்கள் மட்டுமின்றி, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் விமர்சிக்க துவங்கின.
என்ன பிரச்னை?
இந்த நேரத்தில் தான், பெங்களூரு நிறுவனங்கள் தங்கள் அலுவலகங்களை ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் திறக்கும்படி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனும், அமைச்சருமான நாரா லோகேஷ் வெளிப்படையாக அழைப்பு விடுத்தார்.
ஆந்திராவை முதலீட்டிற்கான சிறந்த மாநிலமாக விளம்பரப்படுத்த துவங்கினார். இது, கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசை எரிச்சலடைய செய்தது. இரு மாநில தலைவர்களிடையே காரசார விவாதத்தை உருவாக்கியது.
நாரா லோகேஷின் கருத்து குறித்து கர்நாடக துணை முதல்வர் சிவ குமார் கடந்த வாரம் கூறுகையில், 'பெங்களூரின் தொழில்நுட்பம், திறமை, புதுமை ஆகியவற்றை யாராலும் நிராகரிக்க முடியாது' என்றார்.
கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே, 'ஆந்திராவின் பலவீனமான பொருளாதார சூழலை மறைக்கும் தீவிர முயற்சி இது' என, காட்டமாக விமர்சித்தார்.
இந்நிலையில், அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான, 'கூகுள்' ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில், 'டேட்டா சென்டர்' எனப்படும், தரவு மையம் மற்றும் ஏ.ஐ., எனப்படும், செயற்கை நுண்ணறிவு தொழிநுட்ப முனையம் ஆகியவற்றை அமைக்க உள்ளதாக அறிவித்தது.
இதற்காக அடுத்த ஐந்து ஆண்டுகளில் 1.25 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாகவும் கடந்த 14ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதன் மூலம், 'கூகுள் கிளவுட்' கணினி சேவைகள், தரவு சேமிப்பு மையங்கள் மற்றும் ஏ.ஐ., ஆராய்ச்சி பிரிவு ஆகியவை இந்தியாவில் விரிவடையும். முதற்கட்டத்தில், 10,000க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் உருவாகும் என கூறியுள்ளனர்.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகம் இருப்பதால், இந்தியாவின், 'சிலிக்கான் வேலி' என பெங்களூரு அழைக்கப்பட்டு வரும் நிலையில், 'கூகுள்' நிறுவனம் பெங்களூரை தவிர்த்துவிட்டு ஆந்திராவின் விசாகப்பட்டினத்தை முதலீட்டுக்கு தேர்வு செய்தது, தொழில்துறை வட்டாரங்களில் மட்டுமின்றி அரசியல் வட்டாரங்களிலும் பேசுபொருள் ஆகி உள்ளது.
விசாகப்பட்டி னம் துறைமுக நகரம் என்பதால் தரவு சேமிப்பு மையத்திற்கான கடலடி கேபிள்கள் இணைப்பு அமைப்பது எளிது. மேலும் மிகப்பெரிய வரிச்சலுகையை ஆந்திரா வழங்கியுள்ளது. இதுவே, 'கூகுள்' விசாகப்பட்டினத்தை தேர்வு செய்ய காரணம் என கூறப்படுகிறது.
பேரழிவு
கூகுளின் முதலீடு குறித்து மீண்டும் கர்நாடக அரசை சீண்டும் வகையில் ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் பதிவிட்டுள்ளார். அதில், 'ஆந்திர உணவு மட்டும் காரமில்லை. நாம் பெற்ற முதலீடுகளும் அத்தகையது தான். அண்டை மாநிலத்தவர்கள் சிலர் அதன் எரிச்சலை உணருகின்றனர்' என, குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதில் அளித்த கர்நாடக காங்., அமைச்சர் பிரியங்க் கார்கே, 'ஆந்திர அரசு கூகுளுக்கு, 22,000 கோடி ரூபாய் அளவுக்கு வரிச்சலுகை, நிலம் மற்றும் தண்ணீருக்கு 25 சதவீத தள்ளுபடி, இலவச மின்சாரம், மாநில ஜி.எஸ்.டி., திருப்பி வழங்கப்படும் போன்ற சலுகைகளை வழங்கியிருக்கிறது.
இத்தகைய தள்ளுபடிகள் பொருளாதார பேரழிவு தான். அந்த மாநிலம் இதை சமாளிக்க முடியுமா?' என கேள்வி எழுப்பியுள்ளார்.
உட்கட்டமைப்பில் கோட்டை விட்ட கர்நாடக காங்., அரசின் செயல்பாடு, ஆந்திராவுக்கு முதலீடுகளை அள்ளித்தருவது அரசியல் களத்தில் மட்டுமின்றி, தொழில்துறையினர் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது.