நாட்டின் வளர்ச்சியை வலுப்படுத்த பணியாற்றுவோம்: பிரதமர் மோடி உறுதி
நாட்டின் வளர்ச்சியை வலுப்படுத்த பணியாற்றுவோம்: பிரதமர் மோடி உறுதி
ADDED : டிச 11, 2025 10:38 PM

புதுடில்லி: '' நாட்டின் வளர்ச்சிப் பாதையை வலுப்படுத்த இணைந்து பணியாற்றுவோம்,'' என தேஜ கூட்டணி கட்சி எம்பிக்களுக்கு விருந்து அளித்த பிறகு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
தேஜ கூட்டணி எம்பிக்களுக்கு பிரதமர் மோடி இன்று(டிச.,11) விருந்தளித்தார். பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரில் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும், ஆளுங்கட்சியின் வியூகத்தை வலுப்படுத்தவும் மேற்கொள்ளப்படும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கூட்டணி கட்சிகள் இடையே கருத்துக்களை திறந்த மனதுடனும், ஆக்கப்பூர்வமாக பரிமாறிக்கொள்ளும் நோக்கமும் ஒரு காரணமாக அமைந்ததுடன், அரசின் சட்டங்கள், அரசின் செயல்பாடுகள் குறித்து எம்பிக்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். மூத்த அமைச்சர்கள், பார்லிமென்ட் கட்சி தலைவர்கள், எம்பிக்கள் என இந்த விருந்தில் பங்கேற்றனர். வரவிருக்கும் தமிழகம், அசாம், மேற்கு வங்க சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளவும், வியூகம் வகுக்கவும் இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த விருந்துக்கு பிறகு பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தேஜ கூட்டணி எம்பிக்களுக்கு விருந்து அளித்தது மகிழ்ச்சி. நல்லாட்சி, தேசிய வளர்ச்சி மற்றும் பிராந்திய விருப்பங்கள் மீதான ஒரு பகிரப்பட்ட அர்ப்பணிப்பை தேஜ கூட்டணி பிரதிபலிக்கிறது. வரும் ஆண்டுகளில் நமது நாட்டின் வளர்ச்சிப் பயணத்தை வலுப்படுத்த அனைவரும் இணைந்து பணியாற்றுவோம். இவ்வாறு அந்த பதிவில் பிரதமர் கூறியுள்ளார்.

