ADDED : ஜன 14, 2026 03:31 AM

சென்னை: கடந்த அ.தி.மு.க., ஆட்சியின்போது, 'பொங்கல் பரிசுத் தொகுப்புடன் 2,500 ரூபாய் ரொக்கம் வழங்கப்படும்' என, அப்போதைய முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின், 'நாங்கள் 5,000 ரூபாய் கொடுங்கள் என்கிறோம். கொரோனா காலத்தில் முன்பு 1,000 ரூபாய் கொடுத்தீர்கள். இப்போது கொடுக்கும் 2,500 ரூபாயுடன் சேர்த்தால், 3,500 ரூபாய் ஆகிறது. மீதமுள்ள 1,500 ரூபாயையும் சேர்த்து கொடுங்கள்' என்றார்.
அவரது பேச்சு 'எடிட்' செய்யப்பட்டு, 2,500 ரூபாயுடன், 1,500 ரூபாயை சேர்த்து, 5,000 ரூபாய் வழங்கும்படி கூறியதாக அ.தி.மு.க., தரப்பில் கிண்டலடிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது முதல்வர் ஸ்டாலின், பொங்கல் பரிசு தொகுப்புடன் 3,000 ரூபாய் வழங்கி உள்ளார். அ.தி.மு.க., தரப்பில், 'எதிர்க்கட்சியாக இருந்தபோது நீங்கள் கேட்ட 5,000 ரூபாயை கொடுங்கள்' என வலியுறுத்தி வருகின்றனர்.
இதை வலியுறுத்தி, முதல்வர் ஸ்டாலினை கிண்டலடிக்கும் வகையில், அ.தி.மு.க., செங்கல் பட்டு மேற்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில், 'அந்த 2,500 + 1,500 = ரூ.5,000 எங்கடா' என்ற வாசகத்துடன் சென்னையில் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

