பாதிக்காத வகையில் பரந்துார் விமான நிலையம்? 12 ஏரிகள், 17 குளம், 11 குட்டை மாற்று திட்டம் குறித்து அதிகாரிகள் குழு ஆய்வு!
பாதிக்காத வகையில் பரந்துார் விமான நிலையம்? 12 ஏரிகள், 17 குளம், 11 குட்டை மாற்று திட்டம் குறித்து அதிகாரிகள் குழு ஆய்வு!
UPDATED : ஜன 23, 2025 06:50 AM
ADDED : ஜன 23, 2025 12:42 AM

சென்னை, பரந்துாரில் 12 ஏரிகள், 11 குட்டை, 17 குளம் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு பாதிப்பின்றி, புதிய விமான நிலையம் அமைப்பதற்கான மாற்று திட்டத்தை தயாரிக்கும்படி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக, நீர்வளத்துறை குழுவினர், தொடர் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை விமான நிலையம், 1,000 ஏக்கர் பரப்பளவு உடையது. இங்கிருந்து தினமும் 400க்கும் மேற்பட்ட விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த விமான நிலையத்தை ஆண்டுக்கு, இரண்டு கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். அடுத்த 10 ஆண்டுகளில், பயணியர் எண்ணிக்கை, எட்டு கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டு உள்ளது.
இடநெருக்கடி
இதனால் ஆண்டுக்கு, மூன்று கோடி பயணியரை கையாளும் வகையில் ஒருங்கிணைந்த முனையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இருப்பினும், இடநெருக்கடி காரணமாக, பெரிய ரக விமானங்களை ஒரே நேரத்தில் இயக்க முடியாத நிலை நீடித்து வருகிறது.
தவிர, வடகிழக்கு பருவமழை காலங்களில், அடையாறு ஆற்றின் வெள்ளநீர், விமான நிலைய ஓடுபாதையை சூழ்ந்துவிடுகிறது. இதனால், விமான சேவை முடங்குகிறது.
வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வோர் பெங்களூரு, ஹைதராபாத் விமான நிலையங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது.
மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி, பயணியர் தேவையை கருதி, காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துாரில் புதிய விமான நிலையம் அமைக்க அரசு முடிவெடுத்துள்ளது. விமான போக்குவரத்து ஆணைய பரிந்துரைப்படி, 2020ம் ஆண்டு இந்த இடம் தேர்வானது.
ஆனால், ஐந்து ஆண்டுகளாக இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டு இருந்தது. தற்போது, விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் வேகமெடுத்துள்ளன. இதற்காக, 5,476 ஏக்கர் அளவுக்கு நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன.
இதில், நீர்வளத்துறையின் பராமரிப்பில் உள்ள 12 ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளும் அடக்கம். தவிர அரசு புறம்போக்கு என வகைப்படுத்தப்பட்ட நிலத்தில் மட்டும், ஒன்பது நீர்நிலைகள் உள்ளன. இவற்றின் மொத்த பரப்பளவு 950 ஏக்கர்.
இதில், இரண்டு நீர்நிலைகளை முழுமையாக மாற்றி, விமான நிலையத்தின் ஓடுதளம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இரண்டாவது ஓடுதளம் அமைக்க, இரண்டு நீர்நிலைகள் மற்றும் விவசாய நிலங்கள் உள்ளிட்ட 350 ஏக்கர் நிலம் பயன்படுத்தப்பட உள்ளது.
ஆர்வலர்கள் வலியுறுத்தல்
விமான நிலையம் அமைக்க, ஒரு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. நீர்நிலைகளை பாதிக்காமல், விமான நிலையம் அமைக்க வேண்டும் என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
பரந்துார் விமான நிலையம் அமையவுள்ள பகுதியில் உள்ள 12 ஏரி, 11 குட்டை, 17 குளம், ஐந்து தாங்கல் ஆகிய நீர்நிலைகளை பாதிக்காத வகையில், எவ்வாறு மாற்று திட்டத்தை செயல்படுத்த முடியும் என்பதை ஆராய, தமிழக அரசால் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த குழுவின் பரிந்துரைகளை அரசு கவனத்தில் கொள்ளும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், நீர்நிலைகளை பாதுகாக்க மாற்று திட்டம் உருவாக்குவது குறித்து, சென்னை மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் ஜானகி உள்ளிட்ட அதிகாரிகள், பரந்துாரில் முதற்கட்ட ஆய்வை முடித்துள்ளனர்.
அரசு அமைத்துள்ள உயர்மட்ட குழுவினர், விரைவில் பரந்துார் சென்று ஆய்வு செய்ய உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.