வேகமெடுக்கும் ரயில் பாதை பணிகள்: பட்ஜெட்டில் ரூ.876 கோடி ஒதுக்கீடு
வேகமெடுக்கும் ரயில் பாதை பணிகள்: பட்ஜெட்டில் ரூ.876 கோடி ஒதுக்கீடு
ADDED : ஜூலை 26, 2024 01:37 AM

சென்னை: மத்திய பட்ஜெட்டில், தமிழகத்தில் நடந்து வரும் புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு, 876 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதால், பணிகள் இனி வேகம் எடுக்கும் என, தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய பட்ஜெட்டில், தமிழகத்துக்கு மட்டும், 6,362 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், புதிய பாதைகளுக்கு 876 கோடி, அகலப்பாதை திட்டங்களுக்கு 413 கோடி, இரட்டை பாதை திட்டங்களுக்கு 1,162 கோடி, மின்மயமாக்கல் திட்டத்துக்கு, 111 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திண்டிவனம் - திருவண்ணாமலை புதிய ரயில் பாதை திட்டத்துக்கு, 100 கோடி; திண்டிவனம் -- நகரி 350 கோடி; அத்திப்பட்டு - புத்துார் 50 கோடி; ஈரோடு -- பழனி 100 கோடி; மாமல்லபுரம் - புதுச்சேரி - கடலுார் 25 கோடி; மதுரை - துாத்துக்குடி 100 கோடி; ஸ்ரீபெரும்புத்துார் - இருங்காட்டுக்கோட்டை - கூடுவாஞ்சேரி 25 கோடி; மொரப்பூர் - தர்மபுரி திட்டத்திற்கு 115 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
தமிழக ரயில் திட்டங்களுக்கு 6,362 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு, கடந்த சில ஆண்டுகளுக்கு பின், அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
எனவே, தமிழகத்தில் நடக்கும் ஏழுக்கும் மேற்பட்ட புதிய ரயில் பாதை பணிகளும் இனி வேகம் எடுக்கும். அதேபோல, அனைத்து ரயில் பாதைகளையும் மின்மயமாக்கும் பணி, இந்த ஆண்டில் முடிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
டி.ஆர்.இ.யு., ரயில்வே தொழிற்சங்க முன்னாள் தலைவர் மனோகரன் கூறியதாவது:
தமிழகத்தில் நடக்கும் ரயில் திட்டங்களுக்கு, 35,000 கோடி ரூபாய் தேவை. குறிப்பாக, புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு மட்டும், 14,682 கோடி ரூபாய் தேவை. ஆனால் இதுவரை, 1,295 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியாண்டில், 876 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு முந்தை ஆண்டை ஒப்பிடுகையில் இந்த நிதி அதிகமாக இருந்தாலும், இந்த நிதி புதிய திட்டப் பணிகளுக்கு போதாது.
உத்தர பிரதேசத்தில் 19,848 கோடி ரூபாய், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களுக்கு 15,000 கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு ஒதுக்கியுள்ள நிதி போதாது.
இனி வரும் பட்ஜெட்டிலாவது, ரயில் திட்டங்களுக்கு கூடுதல் நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும். அப்போது, தான் தமிழகத்தில் பல ஆண்டுகளாக நடந்து வரும் ரயில் திட்டங்களை முடிக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.