கிரிக்கெட் ஸ்டேடியம் அவசியம்: அதற்கு முன் பை பாஸ் விரிவாக்கம் அவசரம்!
கிரிக்கெட் ஸ்டேடியம் அவசியம்: அதற்கு முன் பை பாஸ் விரிவாக்கம் அவசரம்!
ADDED : ஜூன் 28, 2024 05:10 AM

கோவை பை பாஸ் ரோட்டை விரிவாக்கம் செய்யாமல், ஒண்டிப்புதுாரில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைத்தால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுமென்று கோவை மக்களிடம் அச்சம் எழுந்துள்ளது.
லோக்சபா தேர்தலில் தி.மு.க., வாக்குறுதியளித்தபடி, கோவையில் ஒண்டிப்புதுாரில் 20.72 ஏக்கர் பரப்பளவில், சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
மொத்தம் 30.41 ஏக்கர் பரப்பளவுள்ள திறந்த வெளிச் சிறை இடம், இதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தில் மைதானம் அமைக்க, இப்போதே எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அங்குள்ள 943 தென்னை மரங்கள் உள்ளிட்ட மரங்கள் மற்றும் விளைநிலப்பகுதி அழிக்கப்படும் என்பது, இந்த எதிர்ப்புக்கு முதல் காரணம். அதையும் விட, அப்பகுதியில் இப்போதுள்ள போக்குவரத்து நெரிசல், இன்னும் பல மடங்கு அதிகமாகி விடும் என்ற அச்சமும் ஒரு முக்கியக் காரணம். ஏனெனில் ஸ்டேடியத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்துக்கு சரியான அணுகுசாலைகள் இல்லை.
நகருக்குள் அமைந்துள்ள திருச்சி ரோட்டில், ஒண்டிப்புதுார் பாலத்துக்கு முன்பாகவுள்ள பகுதி, மிகவும் குறுகலாகவுள்ளதால், 'எல் அண்ட் டி' பை பாஸ் ரோட்டிலிருந்தே, இந்த ஸ்டேடியத்துக்கு பிரதான அணுகுசாலை அமைக்கப்படும் வாய்ப்புள்ளது. ஆனால், கோவை நகரின் ஒரே பை பாஸ் ரோடாகவுள்ள அந்த ரோடும், இப்போது வரையிலும் இரு வழிச்சாலையாகவே உள்ளது.
பை பாஸ் ரோட்டை, குறைந்தபட்சம் நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும்.குறுகலாகவுள்ள இந்த ரோட்டில் கடந்த ஆண்டில் நடந்த விபத்துக்களில் 120 பேர் பலியாகியுள்ள நிலையில், 2031 வரை விரிவாக்கம் செய்யாமலிருந்தால் இன்னும் பல ஆயிரம் பேர் உயிரிழக்கும் வாய்ப்புள்ளது.
இந்நிலையில், இங்கு ஸ்டேடியம் அமைந்தால், பல ஆயிரம் வாகனங்கள் வரும்போது, கற்பனைக்கு எட்டாத அளவுக்கு போக்குவரத்து நெரிசலும், விபத்தும் ஏற்படும்.
அதனால், இந்த ரோட்டை ஆறு வழிச்சாலையாக மாற்றுவது காலத்தின் கட்டாயம். இதன் அவசியம் கருதி, இந்த ரோட்டை நான்கு வழிச்சாலையாக்க, தேசிய நெடுஞ்சாலைத்துறை, விரிவான திட்ட அறிக்கையைத் தயாரித்து வருகிறது.
பை பாஸ் ரோடு விரிவாக்கத்துக்கும், சுங்கம் சந்திப்பில் பாலம் கட்டவும் தனித்தனியாக விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதை விட்டு விட்டு, இரண்டையும் ஒருங்கிணைத்து ஒரே விரிவான திட்ட அறிக்கையாகத் தயார் செய்ய வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இரு பணிகளையும் மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செய்தால்தான், போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்.
இவ்விரு பணிகளும் நடக்காமல், ஸ்டேடியம் அமைத்தால் அது கோவை மக்களின் நிம்மதியில் விளையாடியதாக ஆகிவிடும்.
-நமது நிருபர்-